2 ஆண்டுகளுக்கு பின்.. பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் நாளை முதல் இயக்கம்.. ரயில் பயணிகள் மகிழ்ச்சி!
கோயம்புத்தூர்: பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்படுவதால், ஈரோடு, கோவை, திருப்பூரைச் சேர்ந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாலக்காடு, கோவை, திருப்பூரில் இருந்து பணிக்கு செல்வோா், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வசதிக்காக இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடா்ந்து பாலக்காடு - ஈரோடு மெமு ரெயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை முதல் வியாழக்கிழமைகள் தவிர பிற்பகல் 2.52 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் மெமு ரயில் (06818) இரவு 7.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தை சென்றடையும். ஜூலை 30-ந் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் மெமு ரயில் (எண்: 06819) காலை 11.45 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூா், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூா், வஞ்சிபாளையம், சோமனூா், சூலூா் சாலை, இருகூா், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை, போத்தனூா், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு, கஞ்சிக்கோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோன்று ஈரோடு-கோவை மெமு ரயில், நாளை முதல் நேரம் மாற்றி இயக்கப்படுகிறது.
அதன்படி, ஈரோடு-கோவை மெமு ரயில் (06801) காலை 7.15-க்கு பதிலாக 7.50-க்கு புறப்படும். இந்த ரயில் 10.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூா், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூா், வஞ்சிபாளையம், சோமனூா், சூலூா் சாலை, இருகூா், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்குப் பின்னர், பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதால், ஈரோடு, கோவை, திருப்பூரைச் சேர்ந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications