மொத்தமாக மாறும் காந்திபுரம்.. கோவை பெரியார் நூலகத்திற்காக நடக்கப்போகும் சூப்பர் மாற்றம்
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. அதன்படி காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையம் உள்ளிட்ட போலீஸ் அலுவலகங்கள் இந்த மாத இறுதியுடன் நஞ்சப்பா சாலைக்கு மாற்றப்படவுள்ளது. காவல் நிலையம் உள்ள பகுதி நூலகத்தின் நுழைவு வாயிலாக மாறவுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தொழில்துறை, ஐடி, மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல பிரிவுகளில் கோவை மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. இந்தியாவில் இரண்டாம் கட்ட நகரங்களுக்கான வளர்ச்சியிலும் கோவை முன்னிலை வகிக்கிறது. கோவையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

பெரியார் நூலகம்.. செம்மொழி பூங்கா
கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச ஹாக்கி மைதானம் போன்ற திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன. அவிநாசி சாலையில் ரூ.1,700 கோடியில் 10.10 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்னும் சில மாதங்களில் திறக்கப்படவுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் மத்திய, மாநில அரசுகள் கோவைக்கு மேலும் சில திட்டங்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையின் இதயமான காந்திபுரம் பகுதியில் ரூ.170 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதே காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. ஒரே பகுதியில் இரண்டு பெரிய வளாகம் அமைய இருப்பதால், அங்கு சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே காந்திபுரத்தில் இயங்கி வரும் கோவை மத்திய சிறை வளாகத்தை பிளிச்சி பகுதியில் மாற்ற முடிவு செய்துள்ளனர்.
காவல் நிலையம் மாற்றம்
மறுபக்கம் பெரியார் நூலகத்துக்காக மேலும் சில மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளனர். பெரியார் நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 8 தளங்கள் கட்டப்படுகின்றன. இதற்காக காந்திபுரத்தில் உள்ள காட்டூர் காவல்நிலையத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் அருகே காட்டூர் காவல்நிலையம், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (மத்திய), உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவை உள்ளன.
பெரியார் நூலக வளாகத்திற்காக இந்த காவல் நிலைய அலுவலகங்கள், நஞ்சப்பா சாலைக்கு மாற்றப்பட உள்ளது. நஞ்சப்பா சாலையில் சிறைத்துறைக்கு சொந்தமாக உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள 75 சென்ட் நிலத்தில் ரூ.30 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த காவல் வளாகமாக இந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
காவல்நிலையம் இருந்த பகுதியில் பெரியார் நூலகம் நுழைவு உள்ளிட்ட பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள உள்ளனர். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பெரியார் நூலகம் பணிகள் முடிந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூலம் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications