பில்லூர் அணை நிரம்பியது..பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு - ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவிப்பு
கோவை மாவட்டம் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கோவை: பில்லூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அந்த நீர் முழுமையாக பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்க வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தினசரியும் பெய்து வரும் மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், குந்தா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை நேற்று எட்டியது.
பில்லூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அந்த நீர் முழுமையாக பவானி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.
ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கவோ, பரிசலில் செல்லவோ முயற்சி செய்யக் கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications