ஒரே நேரத்தில் கோவை மீது கண் வைக்கும் மோடி, ஸ்டாலின்.. அடுத்தடுத்த விசிட்டால் அதிரும் அரசியல் களம்
கோவை: தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை தொடங்கி தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார்கள். ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணியும் மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19 ஆம் தேதி கோவை வரவுள்ளார். அதேபோல முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் நவம்பர் 26, 27 தேதிகளில் பயணம் செய்ய உள்ளார். இதனால் கோவை அரசியல் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது.
தென்னந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரம் என்ற பெருமையை பெற்ற கோவை அரசியல் ரீதியாகவும் பரபரப்பான பகுதி தான். அதிமுக மாதிரியான மாநில கட்சி தொடங்கி பாஜக, கம்யூனிஸ்ட்கள் மாதிரியான தேசிய கட்சிகள் வரை இங்கு செல்வாக்குடன் இருக்கிறார்கள். சட்டசபை தேர்தல்களை எடுத்து கொண்டால் கடந்த 25 வருடங்களாக அங்கு தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது.

கோவை அரசியல்
தற்போதைய அதிமுகவின் மொத்த பவர் சென்டரும் கொங்கு மண்டலமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட தலைவர்கள் அங்கு உள்ளனர். அதேபோல பாஜகவும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். எல்.முருகன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும் கோவையில் அதிமுக தான் வெற்றி பெற்றது.
இதையடுத்து திமுகவும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறது. கோவைக்கு செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்தது. கடந்த 2022 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் அது திமுகவுக்கு வெற்றியை தேடி தந்தது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இதில் கொங்கு மண்டல அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது.
மோடி ஸ்டாலின் விசிட்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்துதான் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். அவரின் வருகை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவையின் முக்கிய புள்ளிகள், பாஜக நிர்வாகிகளை மோடி சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மோடி வந்து சென்ற ஒரு வாரத்திலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை வரவுள்ளார். வருகிற நவம்பர் 26, 27 ஆகிய 2 நாட்கள் ஸ்டாலின் கோவையில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கோவையில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை அவர் திறந்து வைக்கவுள்ளார்.
உச்சகட்ட பரபரப்பு
மேலும் கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். அப்போது சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக அவர் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வரும் வாரங்களில் கோவை அரசியல் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.












Click it and Unblock the Notifications