பாஜக ஆன்மீக அணி தலைவர் வீட்டில் வீச பெட்ரோல் குண்டுடன் போன நபர்.. செக்போஸ்டில் சிக்கினார்
கோவை: கோவை மாவட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாஜக ஆன்மீக அணி தலைவர் மணிகண்டனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவரை காவல் துறையினர் கைது செய்தனர். வாகன சோதனையின்போது அந்த நபரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்த பெட்ரோல், பாட்டில்கள், திரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், செல்வபுரத்தில் காவல் துறையினர் வழக்கம்போல நேற்று இரவு ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு இருந்தனர். தெலுங்குபாளையம் அருகேயும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து உள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர். சோதனையின்போது, அவரது வாகனத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் மற்றும் திரியுடன் இரண்டு மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காவல் துறையினர் அந்த பெட்ரோல் பாட்டில்களையும், திரியையும் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் குனியமுத்தூரை சேர்ந்த நாசர் என்பது தெரியவந்துள்ளது. நாசருக்கும் தெலுங்கு பாளையம் பா.ஜ.க. ஆன்மீக அணி தலைவர் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த நாசர் பா.ஜ.க. ஆன்மீக அணி தலைவர் மணிகண்டனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்காக அவ்வழியாகச் சென்றதும் தெரியவந்துள்ளது. நாசர் ஏற்கனவே இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
மேலும், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்தால் திரையரங்கம் மீது குண்டு வீசுவேன் என்று மிரட்டல் விடுத்தவர் என்பதும், இவர் மீது கோவை, சூலூர் போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, நாசரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையில் பெட்ரோல் குண்டு வீசச் சென்ற நபரை வாகன சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுததியுள்ளது. குற்றங்கள் நடக்காமல் முன்னெச்சரிக்கையாக தடுத்த போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications