கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 200 பவுன் கொள்ளை.. ஒல்லிக்குச்சி நபரின் தாயிடம் இருந்து பறிமுதல்
கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகளில் சிலவற்றை பத்திரமாக மீட்டனர். மர்ம நபரின் அடையாளமும் தெரிந்தது.
கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸ். மிகவும் பரபரப்பான சாலையில் இயங்கி வரும் இந்த நகைக் கடையை கடந்த 26ஆம் தேதி பணியாளர்கள் கடையை அடைத்துவிட்டு சென்றனர். பின்னர் 27ஆம் தேதி கடையை திறந்தனர்.

அப்போது ஒரு குறிப்பிட்ட பிரிவில் நகைகள் மாயமானதை அடுத்து மேலாளரின் அறிவுறுத்தலின்படி நகைகள் சரிபார்க்கப்பட்ட போது 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்துதான் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நகைக் கடைக்குள் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள்ளாக மர்ம நபர் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. ஒரே இடத்தில் இருந்து நகைகளை திருடாமல் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக திருடியுள்ளார். 5 தனிப்படைகள் அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு பக்கத்தில் கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. அங்கிருப்போரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
மர்ம நபர் குறித்து சில தடயங்கள் கிடைத்துள்ளன. அவர் பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்துள்ளார். அங்கு நகைகளை திருடிவிட்டு பின்னர் தனது சட்டையையும் முகமூடியையும் அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பியுள்ளார். ஆட்டோவில் உக்கடம் பேருந்து நிலையம் சென்ற அவர் அங்கிருந்து பொள்ளாச்சி சென்றுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீஸார் பொள்ளாச்சி , ஆணைமலை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் போலீஸாருக்கு கிடைத்த தகவல்களை வைத்து நகைக் கடையில் கொள்ளையடித்தவர் தருமபுரி மாவட்டம் ஆணைமலை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.
அவருக்கு ஆணைமலை பகுதியில் வீடு இருப்பதை அறிந்த போலீஸார் அங்கு சோதனையிட்டு நகைகளை அங்கிருந்து மீட்டுள்ளனர். அது போல் அரூரில் விஜயகுமாரின் வீட்டில் சோதனையிட்ட போது அங்கு தங்கநகைகளை அவருடைய தாயிடம் இருந்து மீட்டனர். விஜயகுமார் எங்கே இருக்கிறார் என போலீஸார் தேடி வருகிறார்கள். அவர் மீது நிறைய வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள நகைகளையும் மீட்போம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications