ஷாக்.. கோவை கோர்ட் வளாகத்தில் பெண் மீது ஆசீட் வீசிய கணவர்.. துரத்தி பிடித்த ‛சிங்கப்’ பெண் காவலர்!
கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசீட் வீசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆசீட் வீசிவிட்டு தப்பியோடிய நபரை துரத்தி சென்று தலைமை காவலர் இந்துமதி பிடித்தார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறார். இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த நிலையில் கோவை நீதிமன்ற வளாகம் பரபரப்பானது. இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகே கடந்த மாதம் கோகுல் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் நண்பர் மனோஜ் காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் ஒன்று இன்று நடந்திருப்பது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தம்பதி
கோவை ராமநாதபுரம் காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 35). இவரது கணவர் பெயர் சிவக்குமார் (வயது 45). இவர்கள் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் வழக்கு ஒன்று தொடர்பாக கவிதா கோவை நீதிமன்றத்துக்கு அடிக்கடி வந்து செல்கிறார்.

ஆசீட் வீச்சு
இந்நிலையில் தான் வழக்கு விசாரணைக்காக கவிதா இன்று காலை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தார். இந்த வேளையில் அங்கு அவரது கணவர் சிவக்குமார் வந்தார். அப்போது பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசீட்டை எடுத்து கவிதா மீது ஊற்றினார். இதில் கவிதாவின் உடல் வெந்தது. இதனால் அவர் அலறி துடித்தார்.

துரத்தி பிடித்த பெண் காவலர்
இதை பார்த்த சிவக்குமார் அங்கிருந்து ஓடினார். அவரை வழக்கறிஞர்கள், பொதுமக்கள் விரட்டினர். அப்போது மற்றொரு வழக்குக்காக வந்த ஆனைமலை காவல்நிலைய தலைமை காவலர் இந்துமதி சிவக்குமாரை துரத்தி பிடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தாக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.

ஆசீட் வீச்சு ஏன்?
மேலும் ஆசீட் வீச்சில் காயமடைந்த கவிதா மற்றும் அவரை மீட்க சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கைதான சிவக்குமாரை பந்தய சாலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது குடும்ப பிரச்சனையில் தனது மனைவி மீது உள்ள கோபத்தால் ஆசீட் வீசிது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவலருக்கு பாராட்டு
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் ஆசிட் வீச்சு குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை விரட்டி சென்று பிடித்த ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலர் இந்துமதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் அவரை பாராட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி ரூ.5,000 பரிசு வழங்கினார்.












Click it and Unblock the Notifications