வானதி சீனிவாசன் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்! மொத்தமாக திரண்ட திமுகவினர்! பரபரக்கும் பொள்ளாச்சி!
கோவை: திமுகவினர் குறித்து பாஜக மகளிரணித் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அநாகரீகமாக பேசியதற்கு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி நகர திமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர், மகாலிங்கபுரம் காவல் நிலையத்திலும், காவல் துணை கண்காணிப்பாளரிடமும் புகார் மனுவை கொடுத்தனர்.

திமுக கவுன்சிலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குறித்து வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. வானதி சீனிவாசனுக்கு எதிராக திமுகவினர் வரிந்துக்கட்டிக் கொண்டு சமூக வலைதளங்களில் விமர்சனக் கனைகளை வீசி வருகின்றனர். இதனிடையே கோவை தெற்கு மாவட்ட திமுகவினர் கோவை, பொள்ளாச்சி என பல இடங்களிலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

திமுகவினரை வானதி சீனிவாசன் கொச்சைப்படுத்தி விட்டதாகவும் பொதுவிடம் என்று கூட பாராமல் அநாகரீகமான வார்த்தைகளை உபயோகம் செய்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இதனிடையே திமுகவுக்கு ஆதரவாக மதிமுக நிர்வாகிகளும் புகார் மனுவை கொடுக்க போலீஸ் ஸ்டெஷன் சென்றிருந்தனர்.
இதனிடையே பொள்ளாச்சி நகர திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவை முழுமையாக படித்துப் பார்த்த காவல் துணை கண்காணிப்பாளர், ஆலோசித்துவிட்டு அதன் பிறகு புகார் மீதான நடவடிக்கை பற்றிச் சொல்வதாக அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications