கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்! போலீஸ் அழைத்துப் போனபோது நிருபர்களை பார்த்து சொன்ன சவுக்கு சங்கர்
கோவை: காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என நிருபர்களை பார்த்து முழக்கமிட்டபடி அவர் சென்றார்.
தமிழக காவல்துறை ஏடிஜிபி குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவை சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார்.

இதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவர் தேனியில் இருந்த போது சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவதூறு பேச்சு: இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் வரும் நிலையில் காவல்துறையினர் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர். சைபர் கிரைம் வழக்கு, கஞ்சா வழக்கு இருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்தார். பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது புதியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோலமாவு சந்தியா' என்ற பெயரில் இழிவாக கட்டுரை எழுதியதாக அவர் கூறியிருந்தார்.
சவுக்கு சங்கர்: அந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கஞ்சா வழக்குடன் கோவை சைபர் க்ரைம் எஸ்ஐ சுகன்யா, தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி, திருச்சி மாநகர பெண் காவலர், சேலம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட பலர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது தற்போது வரை ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததை எடுத்து அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் துறை அறிவித்தது.
மருத்துவ பரிசோதனை: இந்த நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரை இன்று மருத்துவ பரிசோதனைக்காக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வலது கையில் மீண்டும் கட்டு போடப்பட்டது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை காவல்துறையினர் காவல் வாகனத்தில் ஏற்ற அழைத்துச் சென்றனர்.
நான் கொல்லப்படுவேன்: அப்போது போலீசார் சுற்றி இருக்கும் போது நிருபர்களை பார்த்த சவுக்கு சங்கர்,”கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் எனது கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிர் ஆபத்து இருக்கிறது.. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என முழங்கியவாரே சென்றார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரை போலீசார் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக காவல் வாகனத்தில் ஏற்றி தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.


Click it and Unblock the Notifications
