மதியம் மதுரை.. இப்போ கோவை.. ஈஷாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
கோவை ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார்.
மதுரை: சிவராத்திரி விழாவையொட்டி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாடு வந்தார். குடியரசுத் தலைவரானதும் தமிழகத்திற்கு முதல் முறையாக அவர் இன்று வருகை தந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து மாலையில் ஈஷா யோகா மையத்துக்கு திரெளபதி முர்மு சென்று மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.
இன்று சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படும். இந்த விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வந்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று வந்தார். இன்று (சனிக்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர், மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மீனாட்சியம்மன் கோயிலில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற திரௌபதி முர்முக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் மதிய உணவை உட்கொண்டார்.
இதையடுத்து தனி விமானத்தில் மாலை 3.10 மணியளவில் கோவை விமான நிலையம் புறப்பட்டார். அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் குண்டுதுளைக்காத பிரத்யேக காரில் புறப்பட்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சென்று திரெளபதி முர்மு ஓய்வு எடுத்தார்.
இதைத்தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க புறப்பட்டார். மாலை 5.45 மணியளவில் ஈஷா யோகா மையத்துக்கு திரெளபதி முர்மு சென்றார். அங்குள்ள தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபாடு செய்து சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். அதன்பின்னர் காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து உணவு அருந்திவிட்டு இரவு தங்குகிறார்.

இதையடுத்து நாளை (19-ம் தேதி) காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். நண்பகல் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமானநிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையம், அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஜனாதிபதி செல்லும் பாதைகளிலும் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் 1,900 போலீஸார், புறநகரில் 3,100 போலீஸார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கோவையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஒத்திகை ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஜிம்கானா மற்றும் ஊட்டியில் உள்ள தீட்டுக்கள் மைதானத்தில் நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications