அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு புதிய பிரச்னை.. முதல்வர் அறிவிப்பை அமல்படுத்துவதில் இப்படி ஒரு சிக்கலா!
கோவை: கோவை அவிநாசி சாலையில் 10 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தை நீலாம்பூர் வரை 5 கிமீ தொலைவுக்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் பாலத்தை நீட்டிப்பதில் சிக்கல் நிலவுகிறது.
கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதேபோல அவிநாசி சாலையிலும் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

கோவை அவிநாசி சாலை முக்கிய மையப் பகுதியாக உள்ளது. கோவை விமான நிலையம், டைடல் பார்க், ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் அங்கு தான் உள்ளன. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அந்த வழியாகத்தான் கோவைக்கு வரவேண்டும். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு, ரூ.1,621 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்பால கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
17.35 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கிருஷ்ணம்மாள் கல்லூரி, ஜிர்ஜி பள்ளி, கேஎம்சிஹெச் மருத்துவமனை, பிஎஸ்ஜி கல்லூரி, லட்சுமி மில்ஸ் பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தனர். தற்போது வரை சுமார் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 10.10 கி.மீக்கான பாலத்துக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். மேம்பாலம் பணிகள் தொடங்கும்போதே, அதை நீலாம்பூர் வரை நீட்டிக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். விமான நிலையத்தை விரைந்து அடைவதற்காகவும், அந்தப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையிலும் மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஏற்கனவே இந்த மேம்பாலம் 10 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது மேலும் 5 கி.மீக்கு நீட்டிப்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவிநாசி சாலை மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ரூ.600 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இது கோவை மக்களிடையே மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அந்த பாலம் எப்படி கட்டப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு பெரியளவு நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்காது. குறைந்தளவிலான நிலம் தான் தேவைப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். முதல்வர் மேம்பாலம் நீட்டிப்பு என்று கூறியுள்ளார். ஆனால் மேம்பாலத்தை அப்படியே நீட்டிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே போடப்பட்டுள்ள திட்டப்படி, கோல்டுவின்ஸ் பகுதியில் ரேம்ப் கட்டப்பட உள்ளது. எனவே, ரேம்ப் திட்டத்தை கைவிட்டு அதை அப்படியே கோல்டுவின்ஸ் வரை நீட்டிக்க வேண்டும். அப்படி செயதால் நீலாம்பூரில் இருந்து கோவை நகரை நோக்கி வரும் வாகனங்கள், விமான நிலையத்துக்கு இறங்க முடியாது.
ஃபன்மால் சந்திப்பில் உள்ள இறங்குதளத்தில் இறங்கி, யூடர்ன் அடித்து விமான நிலையம் திரும்பிவர வேண்டும். அதேபோல உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையம் வரும் வாகனங்கள் கேஎம்சிஹெச் மருத்துவமனை சந்திப்பில் உள்ள இறங்கு தளத்தில் இறங்கியோ அல்லது கோல்டுவின்ஸில் இறங்கி யூடர்ன் அடிக்க வேண்டும்.
பாலத்தை அப்படியே நீலாம்பூர் வரை நீட்டித்தால் கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்க முடியாது. மேலும் நீலாம்பூர் வரையிலான இணைப்பு பணிகளுக்கு மேலும் இடஞ்சலாகும். அதுவரை தற்போது கட்டப்பட்ட வரும் பாலத்தையும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும். எனவே நீலாம்பூருக்கு புதிய மேம்பாலம் கட்டுவதே சிறந்தது என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கோல்டுவின்ஸ் பகுதியில் ரேம்ப் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் வரும் வாகனங்கள், போக்குவரத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விரைவில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications