கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் ஒழுகிய மழைநீர்! டீ கப்பால் முட்டுக்கொடுத்த பயணிகள்.. முடியல
கோவை: கோவை – மயிலாடுதுறை இடையே இயங்கி வரும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதோடு மழைநீர் கசிந்த இடத்தில் டீக்கப்பை வைத்து சமாளித்தபடி பயணிகள் பயணித்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மாதம் 6ம் தேதி தொடங்கிய கோடை மழை மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை அதிகமாக பெய்து வருகிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்நிலையில் தான் கோடை மழைக்கு நடுவே கோவையில் இருந்து வழக்கம்போல் மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரயில் பயணத்தின்போது கனமழை பெய்தது. அப்போது டி-14 பெட்டிக்குள் மழைநீர் கசிந்தது. ரயிலின் மேற்கூரையில் இருந்த ஓட்டையில் இருந்து மழைநீர் கசிந்து பெட்டிக்குள் விழுந்தது.
பெட்டியின் நடுப்பகுதி மற்றும் பெட்டியின் ஓரத்தில் இருக்கையின் மேற்புறத்தில் இருந்து மழைநீர் கசிந்ததால் பயணிகள் மழைநீரில் நனைந்தனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பெட்டியில் ஓரத்தில் இருந்து கசிந்த மழைநீரை தடுக்க பயணிகள் டீகப்பை பயன்படுத்தினர்.
அதாவது ரயிலின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்த இடத்துக்கு கீழே டீ கப்பை வைத்தனர். இதனால் டீ கப்பில் மழைநீர் விழுந்தது. அதன்பிறகு டீகப் நிரம்ப நிரம்ப பயணிகள் அதனை வெளியே ஊற்றினர். இது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை கொடுத்தது. இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் புகாரளித்துள்ளனர். உடனடியாக ரயில் பெட்டியை பழுதுபார்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே தான் கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்குள் மழைநீர் கசிந்தது மற்றும் கசிந்த மழைநீரை டீகப் கொண்டு சமாளித்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் ரயில்வே துறையை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications