ஆர்பி உதயகுமாரின் தாயார் மறைவு குறித்த கருத்து.. மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்!
ஈரோடு: ஆர்பி உதயகுமாரின் தாயார் இறந்து கிடக்கிறார்.. அதனை பார்க்க சொல்லுங்கள் என்று பேசிய செங்கோட்டையன், தற்போது அந்த கருத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆர்பி உதயகுமாரின் துக்கத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும், அவர் தாயின் ஆத்மா சாந்தியடைய அனைவர் சார்பாக இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றியணைய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திடீரென குரல் கொடுத்தார். இதன்பின் செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். இதன்பின் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்தார்.

இதன்பின் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசியதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். உட்கட்சி விவகாரத்தை டெல்லி பாஜக மேலிடத்திற்கு செங்கோட்டையன் கொண்டு சென்றது அக்கட்சியினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செங்கோட்டையனின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் ஆர்பி உதயகுமார் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள ஆதரவை மடைமாற்றம் செய்யும் வகையில் ஆளுங்கட்சி ஒருபுறம் குழிப்பறிக்கிறார்கள் என்றால், மற்றொரு புறம் அதிமுகவிலும் சிலர் திமுகவின் எண்ணத்திற்கு துணை போகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருக்கலாம்.
அது தங்களின் இயலாமையிலானல் ஏற்படும் பொறாமையாகும். பொறாமைத் தீயினால் கட்சி ஒற்றுமை என்ற பெயரை பயன்படுத்தி அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். அந்த வயிற்று எரிச்சல் மனிதர்களுக்கு தோல்விதான் பரிசாக அமையும் என்று தெரிவித்தார். ஆர்பி உதயகுமாரின் கருத்து தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு செங்கோட்டையன், அவருடைய அம்மாவே இறந்து கிடக்கிறார்.. அதனை பார்க்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆர்பி உதயகுமார் தொடர்பாக கேட்டார்கள். அப்போது சொன்ன கருத்துக்கு மன்னிக்க வேண்டும்.
அவர் துக்கத்திலேயே தாயை இழந்து கண்ணீரில் மல்கி கொண்டிருந்த போது, அவரது குடும்பத்தினரை நேரில் சந்திக்க இயலவில்லை. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவருடைய தாயை இழந்து துக்கத்திலும், துயரத்திலும் இருக்கும் இந்த வேளையில், தாயின் அருமை பெற்ற மகனுக்கு மட்டுமே தெரியும். துக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர் ஆத்மா சாந்தியடைய அனைவர் சார்பாக கண்ணீர் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications