வாரிசுகள் கவனிக்காவிட்டால் சொத்துகளை திரும்ப பெற முதியோர்களுக்கு உரிமை.. ஒய்வு பெற்ற நீதிபதி தகவல்
கோவை: கோவையில் பதிவு செய்யப்பட்ட முதியோர் காப்பகங்கள் மற்றும் மாநகராட்சி காப்பகங்களில் உள்ள முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைக்கும் குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் பேசுகையில், வாரிசுகள் கவனிக்காவிட்டால் சொத்துகளை திரும்ப பெற மூத்த குடிமக்களுக்கு உரிமை உண்டு என்று கூறினார்.
முதியோர்கள், வயதான பெற்றோர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2007-ல் மத்திய அரசால் 'பெற்றோர் பராமரிப்பு மூத்த குடிமக்கள் நலச்சட்டம்' கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற பொறுப்பு, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு இருக்கிறது. ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேணடியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். மாவட்டம் தோறும் முதியோர் பராமரிப்பு இல்லங்களை உருவாக்க வேண்டும் என்றும் பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள் தரும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சொத்துகளை அபகரித்துக் கொண்டு பராமரிக்காமல் இருப்பது, சுமையாக இருப்பதாக கருதி வீட்டை விட்டு வெளியேற்றும் பிள்ளைகள் என, முதியவர்கள், பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டாட்சியர் அல்லது கலெக்டரிடம் முறையிட்டு சொத்துக்களை திரும்ப பெ முடியும்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் தலைமையில் கோவையில் பதிவு செய்யப்பட்ட முதியோர் காப்பகங்கள் மற்றும் மாநகராட்சி காப்பகங்களில் உள்ள முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைக்கும் குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் பேசுகையில், "மூத்த குடிமக்கள் தினசரி வாழ்வில் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீர்வு காணும் வகையில் குழு அமைத்து கலந்தாய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது. மூத்த குடிமக்கள் சிலர் அவர்களது சொத்துகளை வாரிசுகளுக்கு கொடுத்து விடும் நிலையில் அவர்கள் கவனிக்காமல் விட்டால், அந்த சொத்துகளை திரும்ப பெறுவதற்கு சட்டப்படி உரிமைகள் இருக்கிறது. ஆனால் இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை. எனவே இதுகுறித்தான விழிப்புணர்வு முதியோர்களுக்கு அளிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
வெளிநாடுகளில் இந்த முதியோர்களின் வாரிசுகள் இருக்கிறபோது இவர்களின் சொத்துகளை கட்டுமானதாரர்களோ, நிறுவனங்களோ அபகரித்து கொண்டு மிரட்டினால் 'ரெரா’ சட்டத்தின் கீழ் பல்வேறு விதிமுறைகள் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நீதிமன்றங்களும் உள்ளன. அதனை அணுகும் பட்சத்தில் தீர்வு காணலாம். மூத்த குடிமக்கள் மிரட்டல்களுக்கு உள்ளாகும் பட்சத்தில், அதற்கு சமூக நலத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications