அண்ணாமலைக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு.. ஒரே பன்ச்சில் முடித்துவிட்ட செந்தில் பாலாஜி
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் அண்ணாமலை போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்விக்கு செந்தில் பாலாஜி அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோட்டைமேடு பகுதியிலுள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.
அந்தப் பகுதியில் ஒவ்வொரு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அண்ணாமலை குறித்த கேள்வி
அப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். "கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். 11 வார்டுகள் அடங்கிய கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கூடிய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், தெற்கு தொகுதி வளர்ச்சியில் சிறந்த கவனம் செலுத்தி தொகுதியின் வளர்ச்சிக்காக நிச்சயமாக பாடுபடுவேன்.
மக்களின் ஆதரவு மற்றும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளேன். இந்த தேர்தலில் உதயசூரியன் வெற்றி பெறும்" என்றார். அப்போது பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி, "போட்டியிடக் கூடிய கட்சி தலைமை தான் அந்தந்த வேட்பாளர்களை தீர்மானிக்கிறார்கள்.
எங்கள் டார்கெட் இதுதான்
எனவே மற்ற கட்சிகளில் யார் போட்டியிடுகிறார்கள் யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. யாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கண்காணிப்பது எங்களுடைய வேலை அல்ல. அது எங்களுக்கான பொறுப்பும் அல்ல. எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய இயக்கம் வெற்றி பெற வேண்டும். முதலமைச்சர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். கோவையில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுகிறோம்.
முதலமைச்சர் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டது கோவை மாவட்டம். செந்தில் பாலாஜி கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்து இருந்தாலும் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் அரசு திட்டங்களை வழங்கியுள்ளார். கோவைக்கு தொடர்ச்சியாக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
கோவை திட்டம்
தலைவர் என்ன கூறுகிறாரோ அந்த கட்டளையை நிறைவேற்றுவது எங்களுடைய பொறுப்பு. நாடாளுமன்ற தேர்தலில் கணபதி ராஜ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் வெற்றி பெற்றார். அதேபோல இந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையின் 10 சட்டமன்ற தொகுதியில் மூன்று தொகுதிகளுக்கு தோழமை கட்சிகளுக்காக கொடுத்துள்ளார். மீதமுள்ள ஏழு தொகுதிகளில் திமுக சார்பில் நேரடியாக நாங்கள் போட்டியிடுகிறோம்.
யார் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது தலைவர் தான். இந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன செய்யப் போகிறோம் என்ற தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். அந்த தேர்தல் அறிக்கையை மக்களிடத்தில் எடுத்துச் சென்று திமுக அரசு அமைந்தவுடன் அதனை முழுமையாக நிறைவேற்றக்கூடிய பணிகளை மேற்கொள்வோம்.
தவெக தாக்கம்
தவெக முதல்முறையாக தேர்தலை சந்திக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு எவ்வளவு வாக்கு வாங்குகிறார்கள் என்று பார்ப்போம். எங்களைப் பொறுத்தவரை எத்தனை இயக்கங்கள் போட்டியிடுகிறது, அவை புதியதா அல்லது பழையதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதிக வாக்குகள் வெற்றி பெற வேண்டியது தான் எங்களுடைய கடமையாக கருதுகிறோம். கோவை மாவட்டம் மற்றும் தமிழகத்தில் திமுக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கோவை தெற்கு தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை வாக்குறுதியாக தயார் செய்துள்ளோம் ஓரிரு நாட்களில் அதை வெளியிடுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications