"யூனிபார்ம் போடலேன்னா கூட.. சில நேரம் போலீஸ்காரனாக மாற வேண்டி இருக்கு!" ஆவேசமான அண்ணாமலை.. என்னாச்சு
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் பிரச்சாரம் செய்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சில நேரம் போலீஸ்காரனாக மாற வேண்டி உள்ளதாக ஆவேசமாகப் பேசினார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், மாநிலம் முழுக்க பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி என்றாலும், தமிழகத்தில் இந்த முறை பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்: இங்கே மாநிலத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கூட்டணி ஆகியவையும் களத்தில் உள்ளன. பாஜக கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த நிலையில், இந்த முறை தங்கள் தலைமையில் தனியாகக் கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் தரப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.
லோக்சபா தேர்தலில் இந்த முறை பாஜக 19 இடங்களில் களமிறங்குகிறது. கணிசமான இடங்களில் வென்று தீர வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குவதால் பல வலுவான வேட்பாளர்களை பாஜக களத்தில் இறக்கியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் களமிறங்குகிறார்கள். அதேபோல பாஜக மாநில தலைவரான அண்ணாமலை கோவையில் களமிறங்குகிறார்.
அண்ணாமலை: பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தாலும் அவ்வப்போது கோவையிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி சமீபத்தில் அவர் கோவையில் பல இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் சில நேரம் மீண்டும் போலீஸ்காரனாக மாற வேண்டி உள்ளதாக ஆவேசமாகப் பேசினார்.
மக்களிடையே பேசிய அவர், "உங்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தர விரும்புகிறேன். பல்லடம் உட்பட கோவை லோக்சபா தொகுதி முழுக்க ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். கோவை எல்லையில் கஞ்சா விற்பனை செய்யும் ஒரு ஆள் கூட இருக்க மாட்டார்கள். இதை உத்தரவாதமாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி கஞ்சா விற்பனை செய்பவன் யாராவது இருந்தால் என்னை சட்டையைப் பிடித்துக் கேளுங்கள்.
ஆவேசம்: சில இடங்களில் காவல் துறை அதிகாரியாக மாற வேண்டிய கட்டாயம் இருக்கு.. அங்கெல்லாம் பொறுமையாகப் பேசினால் வேலை நடக்காது. யூனிபார்ம் போடவில்லை என்றாலும் கூட நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். கஞ்சா விற்பனை செய்யும் ஒருவன் கூட இருக்க மாட்டான். நீங்கள் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்று ஆவேசமாகப் பேசினார்.
கோவை லோக்சபா தொகுதி: கோவை லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை இந்த முறை அங்கு மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த காலங்களில் திமுக அங்குக் கூட்டணிக் கட்சியைப் போட்டியிட வைத்த நிலையில், இந்த முறை அவர்கள் நேரடியாகக் களமிறங்குகிறார்கள். திமுகவில் இருந்து கணபதி ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து அண்ணாமலை போட்டியிடும் நிலையில், அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications