என்ன அதிமுகவை பாஜக முந்துதா? “அட.. அது கருத்துத் திணிப்பு”.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த வேலுமணி!
கோவை: கருத்து கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. பாஜக, அதிமுகவை முந்தும் என கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் எஸ்பி வேலுமணி இவ்வாறு கூறியுள்ளார்.
சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட லோக்சபா தேர்தல் கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் 38.33 சதவிகித வாக்குகளை திமுக பெறும் என்றும், 17.26 சதவிகித வாக்குகளை அதிமுக பெறும், பாஜக 18.48 சதவிகித வாக்குகளை பாஜக பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது பாஜக, அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு பற்றி எஸ்பி வேலுமணி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ள கட்சி அதிமுக. அக்கட்சிக்கென தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் அடிப்படை கட்டமைப்பு உள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அதிமுக வாக்கு வங்கியை பாஜக பின்னுக்குத் தள்ளும் என கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு பற்றி பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "கருத்து கணிப்புகள் என்பது சரியானவை அல்ல. கருத்து திணிப்பு செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் தமிழ்நாட்டில் பெரிய இயக்கம். திமுக எந்த திட்டமும் தரவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
ஐடி விங் பயிற்சி பட்டறை: கோவை குளத்துப்பாளையம் பகுதியில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "ஐடி விங் நமக்கு மிகவும் முக்கியம். எம்ஜிஆர் காலத்தில் டிவியே கிடையாது. ஜெயலலிதா காலத்தில் நிறைய டிவிக்கள் வந்து விட்டது. 1996 ல் ஜெயலலிதா ஆட்சி போக காரணம் டிவிக்கள் தான். திமுக போன்ற பல்வேறு கட்சிகளில் ஐடி விங் ஆட்கள் குறைவாக உள்ளனர். நம் ஐடி விங் வலிமையாக உள்ளது. திமுகவின் மக்கள் விரோத ஆட்சி மக்களிடம் போய்ச் சேரும் வகையில் உங்களது பணி சிறப்பாக இருக்க வேண்டும்.
ஒரு கோடி ஓட்டை உங்களால்தான் மாற்ற முடியும். நமது பிரதான நோக்கம் நடுநிலை வாக்காளர்களை ஈர்க்க வேண்டும். நமக்கு வாக்கு அளிக்க வேண்டும். எங்களை புகழ்ந்து போடுவது உங்கள் பணி அல்ல. திமுக தவறை பதிவாக போட வேண்டும். நமது சாதனைகளை போட வேண்டும். சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும். நமக்கு தான் எதிர்காலம் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு சென்றால் எதிர்காலம் இல்லை. திமுக, பாஜகவுக்கு எதிராக எடுத்து பேச வேண்டும். நடுநிலை வாக்காளர்கள் பார்க்கும் வகையில் பதிவுகளை போட வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.
உலகிலேயே 7வது பெரிய கட்சி: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, "தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரிய கட்சியாக, உலகத்தில் ஏழாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதிகமான ஐடி விங் உறுப்பினர்கள் அதிமுகவில் தான் இருக்கிறார்கள். ஐடி விங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக, பாஜக ஐடி விங் பொய் பரப்புரை செய்கிறார்கள். மற்ற ஐடி விங் ஒருவர் இருந்து கொண்டு, இருபது பேர் இருப்பது போல போடுவார்கள். அதிமுக ஐடி விங் சரியான தகவல்களை போடுவார்கள். ஆபாசமாக பதிவிட மாட்டார்கள். பொய்யான தகவல்களை பரப்ப மாட்டார்கள். மற்றவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். பொய் பரப்புரைகளுக்கு பதிலடி தரும் வகையில் அதிமுக ஐடி விங் செயல்பாடுகள் கண்டிப்பாக இருக்கும்." என்றார்.
பொறுங்க, பொறுங்க: மேலும் பேசிய எஸ்பி வேலுமணி, "விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். தேமுதிக உடனான கூட்டணிக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி அவர்களை பார்த்தோம். அதிமுகவில் கூட்டணி குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக குழு அமைக்க உள்ளது. இரண்டு குழுவும் சேர்ந்து பேசி முடிவு செய்வார்கள். மற்றதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். எந்த கட்சியிலும் கூட்டணி முடியவில்லை. எல்லா கட்சியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் கூட்டணி உறுதியாகும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications