கோவை சிறுமி கொலை: "ஆட்சி மாறினாலும் காட்சி மாறல" - தவெக அரசு மீது முதல்முறையாக SP வேலுமணி விமர்சனம்!
கோவை: "கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என உறுதி செய்ய வேண்டும்" என அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை சிறுமி கொலை விவகாரத்தில் தவெக அரசை சாடியுள்ளார் எஸ்பி வேலுமணி.
கோவை சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் 2 பேர் சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் அந்தச் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
தகவல் அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யாபாரதி, கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. அந்த சிறுமியின் உடற்கூராய்வு இன்று இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற்றது.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளின்படி, கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர் மோகன்ராஜும் கைது செய்யப்பட்டார். தப்பிக்க முயன்ற கார்த்தி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளதாகவும், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதியன்று மாலை சமூக விரோதிகளால் இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து, பொது மக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளானது. சமூக குற்றங்கள் நிகழ போதை பொருட்கள் கலாசாரம் அதிகரித்தது, மிக முக்கிய காரணமாக விளங்கியது.
இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், இதுபோன்ற சமூக குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து, அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்தி, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், வரும் காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடைபெறாமல் தடுக்க, போர் கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், அக்குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதன் காரணமாக அதிமுகவில் இருந்து அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. எஸ்.பி. வேலுமணி தலைமையிலான பிரிவினருக்கு தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், எஸ்.பி. வேலுமணி தவெக அரசை விமர்சித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications