அதிமுகவுக்குள் பிளவா? எடப்பாடியையும் என்னையும் பிரிக்க முடியாது.. எஸ்பி வேலுமணி பரபர விளக்கம்!
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் இடையே எந்தக் குழப்பமும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், கோவை மாநகர முன்னாள் மேயருமான மலரவன் கடந்த சனிக்கிழமை காலமான நிலையில், அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவருடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் இருந்தனர். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியுடன் வரவில்லை.

இதையடுத்து ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் தீயாகப் பரவியது. கடந்த சில நாட்களாக எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக தகவல்கள் பரவின. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமியை, எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று வழியனுப்பி வைத்தார்.
வேலுமணி பேட்டி: பின்னர் கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் அதிகமாக பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடியவில்லை. சென்னை சென்ற எடப்பாடியாரை வழியனுப்ப வந்தோம்.
கோவை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்கிறது. இருந்தாலும் குடிநீர் பிரச்சனை இருக்கிறது. கோவை மாவட்டத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள்தான் இன்னமும் செயல்பாட்டில் இருக்கின்றது. சீரான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்றார்.
தவறான தகவல் பரப்பப்படுகிறது: மேலும் பேசிய வேலுமணி, “பல ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகின்றன. பல சோதனைகளைக் கடந்து கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி அற்புதமாக கூட்டணி வைத்தார். அவரை போல எந்த தலைவரும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவ்வளவு கூட்டம் கூடியது. தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறப் போகிறது.
சிறப்பான முறையில் எடப்பாடியார் ஆட்சி நடத்தினார், தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி முதல்வராக வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி ஒரு சூழ்நிலை இருக்கும்போது தவறான விஷயத்தை பரப்புகிறார்கள். அதிமுக எதிர்க்கட்சியாக ஆன பின்னரும் ஒரு சிலரின் அஜென்டாவை பின்பற்றி எங்களுக்குள் பிளவு என எழுதுகின்றனர். எங்களுக்குள் எந்த குழப்பமும் கிடையாது.
தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு அதிரடி முடிவு? ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க திட்டம்? உதயகுமார் 'பளிச்’!
எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை: குழப்பம் செய்தவர்கள் வெளியே போய்விட்டனர். அதிமுக எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அதிமுக பேரை சொன்னால் பேப்பரை படிப்பார்கள் என்பதற்காக இப்படி எழுதுகின்றனர்.
கட்சிக்குள் என்ன பிரச்சனை என்றாலும் அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் ஆலோசித்த பின்பு தான் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவையும் எடுப்பார். அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கவே பார்க்கின்றனர். திமுக மற்றும் இன்ன பிற கட்சிகளின் தூண்டுதல்களில் நடக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ் சசிகலா இணைப்பு சாத்தியமில்லை. அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை சேர்ப்பது போல வெறும் பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்றார் எஸ்.பி.வேலுமணி. அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் எஸ்.பி வேலுமணி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.












Click it and Unblock the Notifications