வீட்டு வேலை செய்ய சொல்றாங்க சார்.. ஆளுநரிடம் மனு அளித்த மாணவர்.. பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வு மாணவர்களை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவதாகவும், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க 50 லட்சம் முதல் 1 லட்சம் வரை பணம் செலவழிக்கச் சொல்கின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்த மனுவை பட்டமளிப்பு விழா மேடையில் ஆளுநரிடம் மாணவர் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழச்சியில், தமிழக ஆளுநளுர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

ஆளுநரிடம் மாணவர் திடீரென மனு அளித்த சம்பவத்தால் சிறிது நேரம் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அவர்களிடம் மனு கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் ஆளுநரிடம் புகார் அளித்தேன்.
பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள், அவர்களது சொந்த வேலைகளான வீட்டு வேலைக்கு எங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளைப் பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, ஆளுநரிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளேன்.
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளை பொது விடுதியாகப் பயன்படுத்துகின்றனர். ஆதிதிராவிடர் விடுதிகளே இல்லை என்று கூறி அரசு தரும் நிதியை வாங்குவதில்லை.
ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த பின்னர் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பணம் செலவழிக்க சொல்லி பேராசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். இது எல்லா பல்கலைக்கழகத்திலும் நடைமுறையில் இருக்கிறது. இதை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
பல்கலைக்கழக விடுதி பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கம்பர் விடுதியில் கழிவறை சரியாக கட்டப்படவில்லை. சேக்கிழார் விடுதியையும் முறையாக பராமரிப்பதில்லை என்கிறபோது ஒரு கோடி ரூபாய் எங்கே போகிறது என்கிற கேள்வியையும் புகாரில் எழுப்பியுள்ளேன்.

பல்கலைக்கழகத்தில் மணவர்கள் விளையாடுவதற்கு இரண்டு மைதானங்கள் உள்ளன. ஆனால் அதனை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வார விடுமுறை நாட்களில் தனியாருக்கு இரண்டு மைதானங்களையும் வாடகைக்கு விடுகின்றனர். இங்குள்ள தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விளையாட அனுமதிப்பதில்லை.
மேலும், கடந்த 5 வருடங்களாக பல்கலைக்கழகத்தில் விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூல் செய்து வருகின்றனர். இதை அனைத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications