ஆளுநரிடம் புகார் கொடுத்தா ஆய்வு செய்வாங்கனு கூடவா தெரியாது.. கழிவறை 'கப்பால்' கடுப்பான அமைச்சர்
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா மேடையில் ஆளுநரிடம் மாணவர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விழா முடிந்தவுடன் பல்கலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கழிப்பறையில் கடும் துர்நாற்றம் வீசியதால் அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநளுர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி அறிஞர்களை ஆராய்ச்சி அறிஞர்களாகக் கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி அறிஞர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல்கலையில் உள்ள ஆதிதிராவிடர் விடுதிகள் பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.
வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள பணம், உணவு மற்றும் சில வழிகாட்டிகளுக்கு தங்கம் வழங்குகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களை அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார். விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.
பின்னர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையிலும் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியதையடுத்து அங்கிருந்த பல்கலைக்கழக நிர்வாகிகளை கடிந்து கொண்டார். "கவர்னரிடம் புகார் செல்லும் வரை உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களா?. இப்படி ஒரு பெரிய விழா நடக்கும் போது புகார் வந்தால் ஆய்வு செய்ய வருவார்கள் என்கின்ற சிந்தனை கூட இல்லாமல் இருக்கிறீர்கள்" என்று நிர்வாகிகளிடம் கோபத்துடன் கேள்வி எழுப்பிய வீடியோ காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications