என்னை மாதிரி திறமையானவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் அங்கீகாரம் தரவில்லை- தமிழிசை ஆதங்கம்
தமிழ்நாடு மக்கள் தன்னை போன்றவர்களை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்திருந்தால் பலர் மத்திய அமைச்சர்களாகி இருப்பார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து உள்ளார்.
கோவை: நாடாளுமன்ற தேர்தலில் தன்னை போன்ற திறமையானவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே மத்திய அரசு திறமையான நபர்களை தேர்வு செய்து மாநில ஆளுநர்களாக நியமனம் செய்வதாக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து உள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன், தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பல ஆண்டுகளாக பதவி வகித்தார்.
இவரது பதவி காலத்தில்தான் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா என்ற கட்சி மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியது. தினசரி பேசுபொருளாகவும் பாஜக தமிழ்நாட்டில் உருவெடுத்தது. தொடர் நிகழ்வுகள், செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி பாஜகவை தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தினார் தமிழிசை.

ஆளுநரான தமிழிசை
2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் பாரதிய ஜனதா கட்சி தலைவராக பதவியேற்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் தமிழிசை சவுந்திரராஜன். அதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன்.

தமிழ்நாடு மக்கள் அங்கீகரிக்கவில்லை
இந்த நிலையில் நேற்று கோவை சென்ற தமிழிசை சவுந்திரராஜன் பேசுகையில், "மாநிலங்களில் பதவியேற்கும் ஆளுநர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டு அவர் ஜனாதிபதியால் தேர்வு செய்யப்படுகிறார்கள். நிர்வாக திறன் கொண்ட எங்களை போன்றவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மக்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை.

மத்திய அரசு அங்கீகரித்தது
திறமையானவர்களை மத்திய அரசு அடையாளம் கண்டு ஆளுநர்களாக நியமித்து வருகிறது. எங்களை போன்றவர்களை தமிழ்நாடு மக்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்து இருந்தால் பலர் மத்திய அமைச்சர்களாகி இருப்பார்கள். நல்லவர்களையும், திறமையானவர்களையும் தமிழ்நாடு மக்கள் அடையாளம் காண வேண்டும்.

வட மாநில தொழிலாளர்கள்
இதை வெளியில் சொன்னால் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வரும். தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் வருகை தருவதை பேசும்போது அவர்களுக்கு யார் அடுத்த வேலை வாய்ப்பை கொடுக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநரான நான் கருத்து தெரிவிக்க முடியாது." என்று கூறினார்.

4 முறை தேர்தலில் போட்டி
தமிழிசை சவுந்திரராஜன் இதுவரை 4 முறை தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறார். 2 முறை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும், 2 முறை மக்களவைத் தேர்தலிலும் அவர் வெவ்வேறு தொகுதிகளில் களம் கண்டு உள்ளார். ஆனால், ஒருமுறை தமிழிசை சவுந்திரராஜன் எந்த தேர்தலிலும் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது.

ஒரு வெற்றிகூட இல்லை
முதல் முதலாக 2006 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்திரராஜன் 5 வது இடத்தை மட்டுமே பிடித்தார். 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அவர், 4 வது இடத்தை பிடித்தார். 2009 மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிட்டு 3 வது இடத்தையும், 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு 2 வது இடத்தையும் பிடித்தார் தமிழிசை.












Click it and Unblock the Notifications