டீ, காபி, டிபன், தக்காளி சாதம் ரிப்பீட்டு.. எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. வீட்டு முன் தொண்டர்கள்!
கோவை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டபோது தொண்டர்கள் குவிந்த போது டீ, காபி, டிபன் வழங்கப்பட்டது போல், தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் மதியம் தொண்டர்களுக்கு தக்காளி சாதம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 2015-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை 58 கோடியே 23 லட்ச ரூபாய் முறைகேடாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது வருமானத்தை விட 3928% சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

மீண்டும் சோதனை
அதுமட்டுமல்லாமல் சென்னை, கோவை, சேலம், நமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். வினாயகபுரத்தில் உள்ள ( பூந்தமல்லியில் ஊரக வளர்ச்சித் துறை இஞ்சினியராக பணிபுரியும் ) வரதராஜ பெருமாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் கேள்வி
இதே போல் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் நகை கடையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கோவை மைல்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளுக்கு எஸ்.பி. வேலுமணி சென்றது குறித்தும் கேள்விகளை போலீசார் தயார் செய்து கேட்டு வருகின்றனர்.

திரளும் ஆதரவாளர்கள்
இந்த நிலையில் கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடக்கும் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர். மேலும் முன்னாள் எம்.எல்.ஏக்கள், அதிமுக தொண்டர்கள் என கடந்த சோதனை நடந்தபோது திரண்டதைப் போலவே தற்போதும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு வந்த வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி தன்னை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுகவினரும் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

டீ, காபி, தக்காளி சாதம்
கடந்த முறை சோதனை நடந்தபோது, காலை முதல் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. காலையில் இட்லி, பொங்கல், டீ, காபி, வாட்டர் பாட்டில், குளிர்பானம் போன்றவை வழங்கப்பட்டது. அதன்பின்னர் முற்பகலில் ரோஸ் மில்க்கும், மதியம் தக்காளி சாதமும் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த வந்த இடத்தில் மினி விருந்தே கிடைப்பதாக சமூக வலைதளங்களில் அப்போது சிலர் பதிவிட்டுள்ளனர். தற்போதும் இதேபோல் எஸ்பி வேலுமணி வீட்டு முன் குவிந்தவர்களுக்கு முதற்கட்டமாக டீ, காபி, பன், பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும் தொண்டர்களுக்காக மதிய உணவுக்கு தக்காளி சாதம் ஆர்டர் செய்யப்பட்டு விநியோகிக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications
