கோவையை பதறவைத்த சம்பவம்.. கணவர் மீது சானிடைசர் ஊற்றி தீவைத்த கெளசல்யா.. திக் திக் சம்பவம்
கோவை: கோவை மாவட்டம், ராமநாதபுரத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த மனைவி கணவன் மீது சானிடைசர் ஊற்றி தீவைத்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பம் என்றாலே தகராறுகள் ஏற்படுவது வழக்கம்தான். அதிலும், குறிப்பாக கணவன், மனைவிக்கிடையேயான தகராறு என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். ஒரு சில சமயங்களில் இந்தப் பிரச்சினைகள் முற்றி வாக்குவாதம், கைகலப்பாகவும் மாறுகின்றன. குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் அரசு சார்பில் ஆலோசனை வழங்குவதற்கான மையங்களும் உள்ளன. இதன் மூலம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்.

பெரியவர்களின் ஆலோசனை, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதே நல்லது. இல்லையெனில் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில், கோவையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி சானிடைசரை ஊற்றி கணவன் மீது தீப்பற்ற வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (39). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கெளசல்யா தேவி (37). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கெளசல்யாவுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல, நேற்றும் இவர்கள் இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கெளசல்யா தேவி வீட்டில் இருந்த சானிடைசரை சரவணன் மீது ஊற்றி தீப்பற்ற வைத்தார்.
இதில், சரவணனின் உடலில் பரவிய நிலையில், சரவணன் உடனடியாக வீட்டில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து தனது மேல் போர்த்தி தீயை அணைத்துள்ளார். இதில் அவருக்கு காதில் தீக்காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், போலீஸார் கெளசல்யா தேவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவியே தீப்பற்ற வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications