தீபாவளி கொண்டாட்டம்.. சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கு ஷாக் கொடுத்த கொள்ளையர்கள்.. கோவையில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், வழியாம்பாளையம் கிராமத்தில் மென்பொருள் பொறியாளரின் வீட்டின் கதவை உடைத்து 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநிலத்தில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் திருட்டு, ஆஃப்லைன் திருட்டு, பண்டிகை கால திருட்டு என புதுப்புது ரூட்டுகளில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு காவல் துறையினர் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் சார்பில் இதுதொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும், இதுபோன்ற சம்பவங்களில் பொதுமக்கள் சிக்குவது வாடிக்கையாவிட்டது. அந்த வகையில், தீபாவளி கொண்டாட்டத்துக்காக கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்ற சாஃப்ட்வேர் இன்ஜினியரின் வீட்டுக்குள் புகுந்து 1118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கோவில்பாளயத்தை அடுத்துள்ளது வழியாம்பாளையம் கிராமம். இப்பகுதியில் இவா என்ற பெயரில் வில்லா குடியிருப்புகள் உள்ளன. இந்த வில்லாவில் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது மனைவி சுதாவுடன் வசித்து வருகின்றார். சாஃப்ட்வேர் இன்ஜினியரான பாலசுப்பிரமணியம் அந்த துறையில் இருந்து வெளியே வந்து, தற்போது பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்துக்காக கடந்த 30 ஆம் தேதி மனைவி சுதாவுடன், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடி முடித்துவிட்டு இன்று அதிகாலை வழியாம்பாளையத்தில் உள்ள வீட்டுக்குத் திரும்பினார்.
அப்போது, வீட்டின் கதவைத் திறந்தபோது அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், கம்மல், காசு மாலை, வளையல், மோதிரம், பிரேஸ்லெட், செயின் என 118 சவரன் தங்க நகைகளும், 75 கேரட் வைர நகைகளும் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, பாலசுப்பிரமணியன் கோவில்பாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். புகாரின்பேரில், கோவில்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கைரேகைகள் பதிவு செய்யப்பட்டதுடன், மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டு தேடுதல் பணி நடத்தப்பட்டது.
இதேபோல, அதே பகுதியில் மயில்சாமி என்பவரது வீட்டிலும் கதவை உடைத்து உள்ளே கொள்ளையர்கள் சென்றிருப்பதும், அங்கு விலை மதிப்புள்ள பொருட்கள் இல்லாததால் திருட்டு நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவில்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications