கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் எப்போது திறப்பு.. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குட்நியூஸ்
கோவை: கோவை மாநகரை பொறுத்தவரை காந்திபுரம், உக்கடம், ஆர்எஸ்புரத்தை இணைக்கும் ரவுண்டானா முக்கியமான இடமாக இருக்கிறது.இந்த பகுதிகளில் அதிகமான நெரிசல் உள்ளது. அதேபோல் மேட்டுப்பாளையம் சாலையில் நெரிசல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சாய்பாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூன் மாதம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவையில் கடந்த 20 வருடங்களில் மக்கள் அடர்த்தி மிக அதிகமாகி உள்ளது. இதனால் பல இடங்களில் நெரிசல் மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்த நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 15 வருடங்களில் ஓரளவு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவினாசி சாலையில் 10 கிமீ நீள மேம்பாலம், ராமநாதபுரம் மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், நீலாம்பூர் மேம்பாலம், உக்கடம் மேம்பாலம், துடியலூர் மேம்பாலம். ஆத்துப்பாலம் மேம்பாலம் என பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால் கோவையில் பல்வேறு இடங்களில் ஓரளவு நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபாகாலனி, ஜி.என்.மில், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய 4 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் சாய்பாபா காலனி தவிர மற்ற 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. சாய்பாபா காலனியில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.75 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கங்கா மருத்துவமனை முதல் எருக்கம்பெனி வரை 1.2 கி.மீ. தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் தொடக்கத்தில் மிக மெதுவாக நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். எனவே மேம்பால பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்பிறகு மேம்பால பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த உயர்அழுத்த மின்சார கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இந்த மேம்பால இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது நிறைவடைந்ததும் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து கோவை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், சாய்பாபா காலனி மேம்பாலம் கட்டும் பணிகள் 95 சதவீதம் அளவிற்கு முடிந்துள்ளது. எருக்கம்பெனி பகுதியில் இறங்குதளம் அமைக்கப்பட வேண்டும். மேலும் மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்துதல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட சில பணிகள் நிலுவையில் உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் ஜூன் மாதம் மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்கள்.














Click it and Unblock the Notifications