கோவையில் மேற்குப் புறவழிச் சாலை ஓகே.. ஆனா இதையும் கொஞ்சம் கவனிங்க.. விவசாயிகள் கூறும் முக்கிய பாயிண்ட்
கோவை: கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையன மேற்கு புறவழிச் சாலை திட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நீர்வழித் தடத்தின் மீது அமைக்கப்படும் பாலத்தால் விவசாய நிலம் மற்றும் சாலையை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கும். எனவே, விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்குப் புறவழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது கோவை மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பாலக்காடு பிரதான சாலையில் உள்ள மைல்கல்லில் தொடங்கி நரசிம்மநாயக்கன் பாளையம் வரை சுமார் 32 கிலோ மீட்டருக்கு மேற்குப் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடக்கும் இந்தப் பணி மொத்தம் 15 வருவாய் கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைக்கபடவுள்ளது.

இதில், முதல்கட்டமாக மைல்கல்லில் தொடங்கி மாதம்பட்டி வரை கிட்டத்தட்ட 11.8 கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் மதிப்பில் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள மேற்குப் புறவழிச் சாலையில் முதல்கட்டப் பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மேற்குப் புறவழிச் சாலை திட்டம் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. பதினைந்து வருவாய் கிராமங்கள் வழியாக இந்த சாலை அமையவுள்ளது. இச்சாலையில் தலா 7 மீட்டர் அகலத்துக்கு ஓடுதளமும் அமைக்கப்படவுள்ளது. இந்த வழியாக மெட்ரோ ரயில் திட்டம் எதிர்காலத்தில் இயக்க வாய்ப்பிருந்தால் மேற்குப் புறவழிச் சாலை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஐந்து மீட்டர் அகலத்திற்கு மையத் தடுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுக்கரை, மைல்கல்லில் இருந்து மாதம்பட்டி வரை 11.80 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மைல்கல் முதல் மாதம்பட்டி வரை இரண்டு இடங்களில் மேம்பாலம், பதிமூன்று இடங்களில் சிறிய பாலங்கள் கட்டப்படுகின்றன. இதில், சிறிய பாலங்கள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இப்பணிகளுக்கு முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதையுடன் கூடிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டாம் கட்ட சாலையும், மூன்றாம் கட்டமாக நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 8.52 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சாலை அமைக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இறுதிக்கட்ட பணிக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளது. இரண்டு தசாப்தங்கள் முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. இப்பணிகள் தற்போது முடிவுக்கு வரவுள்ளன. இந்நிலையில், மேற்குப் புறவழிச் சாலைக்காக கோவையின் நீர்வழித் தடப் பாதைகளை சிதைக்கக் கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கோவையில் மேற்குப்புற வழிச்சாலை திட்டத்தில் பாலக்காடு சாலை மைல் கல் முதல் மாதம்பட்டி வரை சாலைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தீத்திபாளையம் கிராமத்தில் ஓம் சக்தி கோவில் முதல் குப்பலூர் சாலை வரை 1.5. கி.மீ. தொலைவுக்கு கிராம இணைப்பு சாலைகள் போடப்பட்டு மக்களும் விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஓம்சக்தி கோவிலில் இருந்து குப்பனுார் செல்லும் பாதையில், கன்னிமார் குட்டை அருகில் மேற்குப் புறவழிச் சாலை, தென்வடக்காக குறுக்கே செல்கிறது. அங்கு கன்னிமார் குட்டையில் இருந்து வரும் நீர் பள்ளவாரி வழியாக வந்து தீத்திபாளையம் கிராமத்தின் வழியாகவும், பீட் பள்ளத் தின் வழியாகவும் சென்று, நொய்யலில் கலக்கிறது.
இந்த நீர்வழிப் பாதையின் மீது அமைக்கப்படும் பாலம் விவசாய நிலத்தையும், சாலையையும் பாதிக்கும். எனவே, நீர்வழிப் பாதைக்கோ, சாலைக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அங்கு சாலை அமைக்க வேண்டும். ஆனால், தற்போது வேகமாக நடைபெறும் மேற்குப்புறவழிச் சாலை பணிகளால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் இணைப்புச் சாலை வழியாக, குப்பலூர் கிராமத்துக்கு செல்வது பாதிக்கப்படும்.
அனைத்து வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும். எனவே, ஏற்கனவே இருக்கும் கிராம சாலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மேற்குப் புறவழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications