அமைச்சர் செந்தில்பாலாஜியின் இலக்கு 10,000! அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! நாள் குறிச்சாச்சு!
கோவை: கோவை மாவட்டத்தில் மாற்றுக்கட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோரை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைப்பதற்கான மெகா அசைன்மெண்ட் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
Recommended Video
ஆகஸ்ட் 24-ஆம் தேதி பொள்ளாச்சியில் இதற்காக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார் அவர்.
அதிமுகவிலிருந்து மட்டும் 10 ஆயிரம் பேரை திமுகவுக்கு அழைத்து வருவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

முதல்வர் பயணம்
கொரோனா காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கு பிறகு வெளியூர் பயணங்களை முற்றிலும் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு கொரோனா தொற்றால் ரத்து செய்த கோவை மாவட்ட நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்காக இம்மாதம் 23-ஆம் தேதி மாலை கோவை செல்லும் அவர், அன்றிரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

கோவையில் முதல்வர்
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24-ஆம் தேதி காலை கோவை கிணத்துக்கடவில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் 82,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பொள்ளாச்சி செல்லும் அவர், அன்று மாலை நடைபெறும் பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

10,000 பேர்
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 50,000 பேர் வரை ஆட்களை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவிலிருந்து மட்டும் 10,000 பேரையாவது திமுகவில் இணைத்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு களமாடி வருகிறார். ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திலிருந்து இன்னும் பல்லாயிரக்கணக்கில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்களை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைப்பதற்கான பணிகளை கவனித்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

டிவிஸ்ட் காத்திருக்கிறது
இதில் டிவிஸ்ட் என்னவென்றால் கோவை மாவட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்கள் பலர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவிருப்பது தான். யாரெல்லாம் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையவிருக்கிறார்கள் என்ற தகவலை ரகசியம் காத்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆகஸ்ட் 24-ஆம் தேதி பொள்ளாச்சி பொதுக்கூட்ட மேடையில் பல சர்ப்ரைஸ்களை தர தயாராகிவிட்டார்.

ஆடுபுலி ஆட்டம்
இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜி டீம் யாருக்கெல்லாம் தூண்டில் வீசி வருகிறது என்பதை துப்பு துலக்கிய மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு, அவர்களை அதிமுகவை விட்டு விலக வேண்டாம் என சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகிறது. குளு குளு வானிலையை கொண்ட கோவை மாவட்டத்தில் திமுக அதிமுக இடையேயான அரசியல் ஆடுபுலி ஆட்டம் அனல் பறக்கிறது.












Click it and Unblock the Notifications