பெங்களூருவில் கொல்லப்பட்ட இலங்கை தாதா உடல் கோவையில் எரிப்பு- கூட்டாளிகள் யார் யார்? விறுவிறு விசாரணை
கோயம்புத்தூர்: பெங்களூருவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதா அங்கொட லொக்காவின் உடல் கோவையில் எரிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர் அங்கொட லொக்கா. 2017-ல் எதிரி கேங்கில் 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட அங்கொட லொக்கா அங்கிருந்து தப்பி சென்னையில் பதுங்கினார்.

சென்னை போலீசிடம் சிக்கிய அங்கொட
ஆனால் சென்னை போலீசார் அங்கொட லொக்காவை கைது செய்தனர். அதுவும் 2 முறை கைது செய்திருக்கின்றனர். போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற போதும் சிக்கியிருக்கிறார் அங்கொட. ஆனால் ஜாமீனில் வெளிவந்த அங்கொட லொக்கா, சென்னை போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பெங்களூருவுக்கு தப்பினார்.

கோவையில் எரிப்பு
அங்குதான் ஜூலை3-ந் தேதி அங்கொட லொக்கா கொல்லப்பட்டார். அவருடன் நெருங்கிப் பழகிய பெண்தான் அங்கொட லொக்காவுக்கு மதுவில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனிடையே அங்கொட லொக்காவின் உடல் தமிழகத்தின் கோயம்புத்தூருக்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

கோவை கொண்டுவரப்பட்டது எப்படி?
இது தொடர்பான வீடியோக்கள் இலங்கை போலீசார் வசம் கிடைத்திருக்கிறதாம். தற்போது லாக்டவுன் காலம்.. அதுவும் பெங்களூருவில் தீவிர லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட சூழலில் அங்கிருந்து அங்கொட லொக்காவின் உடல் கோயம்புத்தூருக்கு எப்படி கொண்டுவரப்பட்டது? கோயம்புத்தூரில் யார் யார் உதவியாக இருந்தது? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பும் எதிர்பார்ப்பும்
சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகமும் இதுபற்றி விசாரணைகளை நடத்தி வருகிறது. அங்கொட லொக்காவின் கொலை சம்பவமானது இலங்கையில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கொலையில் அவிழப் போகும் மர்ம முடிச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே அங்கொட கொலை சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எதுவிதமான தகவல் இல்லை என இந்திய தரப்பு தற்போதுவரை திட்டவட்டமாக கூறி வருகிறது.












Click it and Unblock the Notifications