தாய்மொழியில் குழந்தைகளுக்கு கல்வி.. புதிய கல்விக் கொள்கை அம்சம் அதுதான்.. வானதி சீனிவாசன் கருத்து!
கோவை: தாய்மொழியில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கிராமத்தில் கோடி சுவாமிகளின் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் ஆலயத்தை புனரமைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் அர்ப்பணிக்கும் நிகழ்வு திரையில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

இந்தி திணிப்பு விவகாரம்
அப்போது வானதி சீனிவாசனிடம் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, புதிய கல்விக் கொள்கையை பிரதமர் முடிவு செய்யவில்லை. அம்பேத்கர் மற்றும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது. இந்த நாட்டில் உள்ள அத்தனை மொழிகளும் தேசிய மொழிகள் என்று பாஜக சொல்கிறது. குறிப்பிட்ட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று எந்த பகுதியிலும் இல்லை.

தாய்மொழி வழியில் கல்வி
விருப்பப்பட்டு எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இந்த நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் முக்கியமானது. தாய்மொழி வழியிலேயே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சம். இதைக் கற்றுக் கொண்டால் தான் மாணவர்கள் கல்வித்திறன் மேம்படும். இதைதான் பிரதமர் மோடி சொல்கிறார். அலுவல் மொழி என்பது பாஜக கொண்டு வந்தது அல்ல. அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

திருநீறு பற்றி வானதி சீனிவாசன்
தொடர்ந்து வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவை கொண்டாட தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. வள்ளலாரின் சமய அடையாளங்கள் குறிப்பாக திருநீறு பூசாத படங்களை வைப்பதில் முதலமைச்சருக்கும் திமுக அரசுக்கு அப்படி என்ன ஆசை என்று தெரியவில்லை. வடலூரில் பிரசாதமாக கொடுப்பதே திருநீறு தான்.

திராவிட அரசியல்
ஆனால் திருநீறு இல்லாமல் வள்ளலார் படத்தை வரைய வேண்டும் என்று திராவிட அரசியல் சொல்கிறதா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, கோடிக்கணக்கான மக்கள் சமய நம்பிக்கையோடு திருநீறு இடாமல் வெளியில் செல்வதில்லை. தமிழர்களின் அடையாளம் என்றால் திருநீறு தான். அப்படியான திருநீறை கூட திராவிட அரசியல் மறுத்து பேசுகிறதா என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications