கோவை மாநகராட்சியில் கக்கன், அண்ணா பெயரில் கழிவறை.. தரம் தாழ்ந்த செயல்.. அண்ணாமலை கண்டனம்
கோவை: கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிப்பறைக்கு வைத்திருக்கிறார்கள். எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் வார்டு எண் 95ல் வரும் சில்வர் ஜூப்ளி பகுதிக்கு உள்பட்ட அண்ணா நகரில் கழிப்பறை ஒன்று உள்ளது. மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த கழிப்பறைக்கு அண்மையில் பெயிண்ட் அடிக்கப்பட்டது. அப்போது இந்த கழிவறையின் முன்பக்க சுவரில், அண்ணாதுரை, கக்கன் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டது. கழிவறைக்கு மூத்த அரசியல் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிப்பறைக்கு வைத்திருக்கிறார்கள். எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன?

உடனடியாக, கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications