கோவை அமைச்சர் நிகழ்ச்சியில்.. தவெக கொடி நிறத்தில் துணி.. கடைசி நேரத்தில் அலர்ட்டான அதிகாரிகள்
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அதில் தவெக கொடி நிறத்தில் மேஜையில் ஒரு துணி விரிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் வருவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்த துணியை அகற்றிவிட்டு, வேறு துணியை வைத்தனர்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில், அந்தக் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய தவெக தலைவர் விஜய், கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எதிரி என்று குறிப்பிட்டார்.

குடும்ப ஊழல் ஆட்சி என திமுகவை கடுமையாக விமர்சித்தார். இப்போதுவரை தவெக பற்றிய கருத்துகள் அரசியல் களத்தில் பரபரப்பாகவே உள்ளன. அதிமுகவை தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அதிலும் தொடக்கத்தில் விஜய்யை ஆதரித்து வந்த, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். தவெக மாநாட்டில் பேசிய விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியிருந்தார்.
இது திமுக கூட்டணியை உடைப்பதற்காக விஜய் எடுத்த நகர்வு என்று கூறப்பட்டது. மேலும் டிசம்பர் 6 ஆம் தேதி விஜய்யும், திருமாவளவனும் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. விஜய் நேரடியாக திமுகவை எதிர்ப்பதால் ஆளும் திமுகவும் அதை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
புதிதாக கட்சி தொடங்கிய. வரவன் எல்லாம் திமுகவை விமர்சிக்கின்றனர் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். எந்த திசையில் யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி. ஆலமரத்தை பிளேடால் வெட்ட முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி கூறியிருந்தார்.
உதயநிதி கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் சென்றபோது, அங்கு விஜய் மாநாட்டை விட அதிகளவு கூட்டம் கூட்ட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாக கூறியிருந்தார். கோவை, விருதுநகர் திமுக கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலினும் விஜய் பற்றி பேசினார்.
புதிதாக தொடங்கப்பட்ட கட்சியை பற்றி கவலைப்பட வேண்டாம். அதை கண்டுகொள்ளவும் வேண்டாம். இளைஞர்களிடம் மட்டும் அதிகம் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் அதிகளவு இளைஞர்களை இணைத்து, அவர்களை கொள்கை வீரர்களாக உருவாக்குங்கள் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உளவுத்துறை மூலம் தவெக மற்றும் விஜய் நடவடிக்கைகளை ஆளும் தரப்பில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று மாலை கோவை வந்தார். தொடர்ந்து நேற்று பல இடங்களில் அவர் ரகசிய ஆய்வு நடத்தினார்.
கோவை அரசு மருத்துவமனையில் ரூ.13 மதிப்பில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அதில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேஜையில் தவெக கொடி நிறத்தில் துணி விரிக்கப்பட்டிருந்தது.
அரசு நிகழ்ச்சியிலேயே தவெக கொடி நிறத்தில் துணியா என்று பேச்சு எழுந்தது. சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் உடனடியாக அதை மாற்றும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் தவெக கொடி நிறத்தில் இருந்த துணியை அகற்றிவிட்டு, அந்த மேஜையில் வெள்ளை நிற துணியை வைத்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக நிர்வாகிகள் பலரும், எங்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஆளுங்கட்சி இன்னும் பதட்டத்திலேயே இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications