கோவையில் சிக்கன் ரைஸ் வாங்கிவிட்டு கத்தியைக் காட்டி மிரட்டிய இருவர்.. சூப்பர் பரிசு கொடுத்த போலீஸ்
கோவை: கோவை மாவட்டம், ஒட்டர்பாளையம் பகுதியில் சிக்கன் ரைஸ் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக கோவை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம், மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் மிரட்டும் பிரச்சனையில் ஈடுபடுவது இப்போது ஃபேஷனாகி விட்டது. ஹோட்டல்களுக்கு செல்லும் சிலர் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காக டிசைன் டிசைனாக யோசித்து அற்ப செயல்களில் ஈடுபடுகின்றனர்.

வேண்டும் என்றே தேவையில்லாத பொருள்களை சாப்பாட்டில் போட்டுவிட்டு ஹோட்டல் உரிமையாளர்களை மிரட்டுவது, வீடியோ எடுத்துவிட்டு சமூக வலைதளங்களில் போட்டு ஹோட்டல் பெயரைக் கெடுத்துவிடுவதாக மிரட்டல் விடுப்பது, குடி போதையில் பணம் தராமல் தகராறில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒட்டர்பாளையம் பகுதியில் ஆண்கள் இருவர் சிக்கன் ரைஸ் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ஒட்டர் பாளையம், எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் பிரபலமான பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பேக்கரிக்கு நேற்று இரவில் ஆண்கள் இருவர் வந்துள்ளனர். அப்போது, சிக்கன் ரைஸ் பார்சல் வேண்டுமென்று கேட்டுள்ளனர். இதையடுத்து, பேக்கரி ஊழியரும் சிக்கன் ரைஸை செய்து அவர்களிடம் கொடுத்துள்ளார்.
அந்த சிக்கன் ரைஸை வாங்கிய இருவரும் அங்கிருந்து செல்ல முயன்றபோது, கடைக்காரர் உணவுக்கான பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது, பணத்தைக் கொடுக்காமல் சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடைக்காரரை மிரட்டியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத கடைக்காரர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், கல்லாவில் இருந்தவரின் சட்டைப் பையில் இருந்த பணத்தையும் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த கடைக்காரர் சப்தம் போடவே கடையில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்த நிலையில், அந்த இரு நபர்களும் கடையில் இருந்து ஓடியுள்ளனர். இதுகுறித்து அந்த பேக்கரியின் காசாளர் தங்கராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், கத்தியைக் காட்டி மிரட்டியவர்கள் கோவை, இருகூர் பகுதியில் வசிக்கும் நிர்மல் மற்றும் ராஜா ரவி என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications