Tiger Attack: நள்ளிரவில் குழந்தையை தூக்கி சென்ற புலி.. விடாமல் விரட்டி உயிரை காப்பாற்றிய பெற்றோர்
வால்பாறை: வால்பாறை காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒவ்வொரு இரவும் ஆபத்தானவை தான். கோவை வால்பாறை தமிழ்நாடு - கேரளா எல்லையை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தில் நேற்று நள்ளிரவு புலி ஒன்று சென்றுள்ளது. தொடர்ந்த அந்த புலி அங்கு தூங்கி கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை தூக்கிச் சென்றது. பெற்றோர் அலறியடித்து புலியை விடாமல் விரட்டி சென்று கூச்சலிட்டனர். இதில் பயந்த புலி குழந்தை ராகுலை விட்டு சென்றது. பெற்றோரின் வீர தீர செயலால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழ்நாடு - கேரளா எல்லையில் மலுகுப்பாறை என்ற பகுதி உள்ளது. திருச்சூர் மாவட்டம், பெரியார் புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட அங்கு ஏராளமான தனியார் எஸ்டேட்டுகள் அதிகம் உள்ளன. வால்பாறை - அதிரப்பள்ளி செல்லும் அடர்ந்த காட்டுப் பகுதியை ஒட்டியிருப்பதால், அங்கு புலி, யானை, சிறுத்தை, கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

வனவிலங்குகள் நடமாட்டம்
அந்த விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிக்கும் வந்து செல்லும். பொதுவாக இரவு நேரங்களில் தான் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். ஆனால் சமீபகாலமாக பகல் நேரங்களிலும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வாகனத்தில் செல்வதற்கு கூட கேரளா வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அந்த மாநில வனத்துறையினர் வனவிலங்குகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அந்தப் பகுதி சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை நோக்கி செல்வதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வார்கள். அப்போது யானை, புலி, சிறுத்தை போன்ற சர்வ சாதாரணமாக சாலையை கடக்கும். இதுதொடர்பாக வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் அதிகம் காணலாம்.
சரியான வீடு இல்லை
மழுகுப்பாறை பழங்குடி கிராமம் அடர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. அந்த கிராமத்தை சுற்றி பழங்குடி மக்களின் ஏழு செட்டில்மென்ட்கள் (குடியிருப்பு) உள்ளன. அதில் நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த மக்கள் தேன், மிளகு, சாம்பிராணி, மரத்தூள், பயிர் வகைகள் கிழங்குகள் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறார்கள்.
ஆனாலும் அந்த மக்களுக்கு பாதுகாப்பான வீடு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. முக்கியமாக வசியம் என்கிற பகுதியில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்ட நிலையில் தான் வீடுகள் உள்ளன. அங்கு பாதுகாப்பு இல்லாமல் பலர் குழந்தைகளுடன் குடும்பமாக குடியிருந்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு வீடு கட்டி கொடுக்கவில்லை என்ற புகார் உள்ளது.
குழந்தையை தூக்கிய புலி
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வசியம் பழங்குடி சென்டில்மென்டில் பேபி சித்ரா என்பவர் தன் கணவர் மற்றும் 3 வயது மகன் ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது காட்டில் இருந்து அந்த வழியே வந்த புலி குழந்தை ராகுலை தூக்கிச் சென்றது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர், தங்கள் குழந்தையை புலி தூக்கி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பதற்றத்தில் தாமதமாக முடிவு செய்யாமல், ராகுலின் பெற்றோர்கள் தொடர்ந்து சத்தமாக கத்தி, கூச்சலிட்டு வனப்பகுதியை நோக்கி ஓடியுள்ளனர். அவர்கள் விடாமல் விரட்டியதால், ஒருகட்டத்தில் புலி ராகுலை அங்கு விட்டு விட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சிகிச்சை
இதில் குழந்தைக்கு பின் தலை மற்றும் காது பகுதியில் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குழந்தை ராகுலை மீட்டு தனியார் எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கேரளா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications