வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி.. பொள்ளாச்சியில் ஸ்டாலின் சொன்னதுமே.. கோவையில் சிரித்தபடி வானதி ரியாக்சன்
கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் பாஜகவினரை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனை கோவை அரசு மருத்துவமனையில் காணொளி காட்சியில் சிரித்தபடி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கவனித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் "பொலிவு மிகுந்த பொள்ளாச்சி நகரில், கோவை-நீலகிரி-திருப்பூர்-ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற எழுச்சிமிகு விழாவில் மகிழ்ச்சியோடு நான் பங்கேற்க வந்திருக்கிறேன்.
இந்த மாவட்டங்களுக்கெல்லாம் நான் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மன உறுதியோடு, தெம்போடு, துணிவோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைய நீங்கள் அளித்த வாக்குகளை, பின்னால் இருக்கின்ற நம்பிக்கையை சிந்தாமல், சிதறாமல் பாதுகாத்து வாக்களிக்க தவறியவர்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில், இதுவரை மூன்றாண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமையுடன் உங்களுடைய முகங்களை நான் இப்போத பார்க்கிறேன். நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சியை, எழுச்சியை பார்க்கின்றபோது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், பொது தேர்தலாக இருந்தாலும், எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.
பொள்ளாச்சி என்றாலே, கவிஞர் மருதகாசி எழுதிய பாட்டுதான் பலருக்கும் ஞாபகம் வரும். அதிலும், இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் இருக்கின்ற இளைஞர்களிடம் கூட அவருடைய அந்த பாடல் நன்றாக ரீச் ஆகி உள்ளது "பொதியை ஏற்றி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு, நீயும் வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக் கண்ணு" என்ற இந்த பாடல் பொள்ளாச்சியோட வர்த்தக பெருமையை சொல்லுகிறது!. அப்படிப்பட்ட இந்த பொள்ளாச்சி அமைந்திருக்கக்கூடிய இந்த கோவை மாவட்டத்துக்கு நான்கு முறை வந்து ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 949 பேருக்கு ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன்.
நம்முடைய திட்டங்கள் மூலமாக பயனடைந்த ஒவ்வொருவரையும் செல்போனில் அழைத்து, முதலில், நீங்கள் நலமா என்று கேட்கிறேன். பின்னர், திட்டத்தின் பயன் வந்து சேர்ந்ததா என்று கேட்கிறேன். அதில் ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று கேட்கிறேன். கோட்டையிலிருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடியில் இருக்கின்ற மக்களிடமும் பேசுகின்ற முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான் தான்! இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். அடக்கத்தோடு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன்.
உங்கள் ஒவ்வொருவருடைய உணர்வையும் மதிக்கின்றவன் நான்! உங்கள் ஒவ்வொருவருடைய கருத்தையும் காது கொடுத்து கேட்கிறவன் நான்! உங்கள் கோரிக்கைகளை-தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்று உழைக்கின்ற முதலமைச்சர் நான்! அதுனால்தான், "நீங்கள் நலமா?" திட்டத்தை தொடங்கியிருக்கிறேன். இப்படி சிந்தித்து, சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்கியதால் தான் தமிழ்நாட்டினுடைய தொழில்வளம் உயருகிறது! வேலைவாய்ப்பு பெருகுகிறது! பொருளாதாரம் வளருகிறது! ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது!
அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு, தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துகின்ற வகையில், பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப "வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி" நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டுகிற நேரம் வந்துவிட்டது..
10 ஆண்டுகால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்திருக்கிறதா?. கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு இதுவரை என்ன செய்தது?. பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே நான் உறுதி அளித்திருந்தேன். திமுக மகளிரணி சார்பில்தான், போராட்டம் நடத்தினார்கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் நடத்தினார்கள். ஆனால், சாட்சிகள் மிரட்டப்படுகின்ற போது வேடிக்கையைப் பார்த்தார்கள்.
முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் பாஜகவினரை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனை கோவை அரசு மருத்துவமனையில் காணொளி காட்சி சிரித்தபடி கவனித்துக் கொண்டிருந்தார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன். #bjp #dmk #mkstalin #Coimbatore pic.twitter.com/b7iADWnNJV
— velmurugan (@velmurugantheni) March 13, 2024
பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டபோது, "அப்படியெதுவும் இல்லை. ஆதாரம் இருந்தால் கொடுங்க" என்று சொன்னார். நான் பொள்ளாச்சிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கூறினேன். இதை நான் சும்மா விடமாட்டேன். நிச்சயமாக, இதற்குரிய நடவடிக்கையை இந்த ஸ்டாலின் உறுதியாக எடுப்பான் என்று அப்போதே நான் உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்துவிடவில்லை. மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம். மறந்திட முடியுமா. பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரியமாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டி உள்ளார்கள்..
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு உள்ள நிலையில், அந்தப் பெண்ணுடைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி, அந்த வழக்கு சிபிஐ விசாரித்து இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது..
தற்போது தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி ஒருபக்கம் என்றால், தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டை வளமாக்க - தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றொரு பக்கம் ஜனநாயகச் சக்திகளும்-தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம்!
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாத போதே, இத்தனை சாதனை திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என்றால், நமக்கு உதவி செய்கின்ற ஒன்றிய அரசு அங்கே அமைந்திருந்தால், இன்னும் பத்து மடங்கு சாதனைகளை இந்த திமுக செய்திருக்கும். அதற்கான நேரம் நெருங்கி வருகிறது!
நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத பிரதமர், 'மோடியின் உத்தரவாதம்' என்று பக்கம் பக்கமாக விளம்பரம், டிவி-யில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதமர் அவர்களே... மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் கொடுத்த பழைய உத்தரவாதமான ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாயின் இன்றைய கதி என்ன?
இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உத்தரவாதம் தந்தீர்களே அதன் கதி என்ன? அதை சொல்லுங்கள் பிரதமர் அவர்களே!
அதுகூட வேண்டாம், அடுத்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. வரப்போகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்து தந்திருக்கின்ற சிறப்புத் திட்டங்களை பட்டியலிடுங்கள்! என்ன சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் கேட்கவேண்டும்! "பதில் சொல்லுங்க பிரதமரே.." என்று எல்லோரும் கேட்க வேண்டும். கேட்பீர்களா!
கடந்த முறை வந்தபோது பேசுகிறார்... பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகின்ற திட்டங்களை தி.மு.க. தடுக்கின்றது என்று பிரதமர் சொல்கிறார். பிரதமர் அவர்கள் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை, நாம் சென்று தடுக்கிறோமா!
நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருப்பீர்கள், அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு சொல்லுவார்கள் - அது மாதிரி, இது மோடி புளுகு! அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்; நாம் தடுப்பதற்கு? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா? நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ல் அறிவித்தார்கள். அப்போது யார் தமிழ்நாட்டில் முதலமைச்சர்? மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவர் தடுத்தாரா? இல்லையே.
அடுத்து, உங்கள் நண்பர்கள் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் அவர்கள் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், நாங்கள் தடுத்தோமா? இல்லை, தமிழ்நாட்டு மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே? உங்களை யாரும் தடுக்கவில்லையே! ஆட்சியில் இருந்த பத்து வருஷமாக தமிழ்நாடின் திரும்பி பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! இனி இந்த பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது!" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் இன்று பொள்ளாச்சியில் பேசிக்கொண்டிருந்தார்.
முதல்வரின் பேச்சை இதனை கோவை அரசு மருத்துவமனையில் காணொளி காட்சியாக கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டிருந்தார். வாட்ஸ் அப்யுனிவர்சிட்டி என்று விமர்சித்து கொண்டிருந்த போது புன்முறுவல் பூத்தபடி வானதி சீனிவாசன் கவனித்துக்கொண்டிருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications