திரிஷா குறித்து பேசியது வருத்தம்.. நயினாரிடம் கேட்பேன்.. ஓப்பனாக அடித்த பாஜக வானதி சீனிவாசன்
கோவை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்கிறது. அதனுடன் தவெக மீதும் விமர்சனம் வைக்கின்றனர். விஜய் - த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக விமர்சத்தது சர்ச்சையையும், கண்டனத்தையும் கிளப்பியுள்ளது. பாஜக பெண் எம்எல்ஏவான வானதி சீனிவாசனே, நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தமளிக்கிறது [Vanathi upset on nainar nagendran] என்று கூறியுள்ளார்.
கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களுக்கு 28 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்எஸ்புரம் பகுதியில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக டிராமா..
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், "பெண்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் வரவு வைக்கப்படுவதை பாஜக தடுக்க பார்க்கிறது என்று முட்டாள்தனமான கருத்தை திமுகவினர் பேசி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக கொடுக்கின்ற பணத்தை பாஜக அரசு தடுத்ததா.
தற்பொழுது வேண்டுமென்றே காதில் பூ சுற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். பாஜக அரசு தடுப்பது போன்றும் முதல்வர் பெண்களின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கிறார்கள். இந்த அரசாங்கமே டிராமா அரசாங்கம். தற்போது மற்றொரு டிராமாவை பார்த்துக் கொண்டிருக்கிறோம், தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசு அலுவலகங்கள் முன்பும் ஆசிரியர்கள் செவிலியர்கள் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் என பலரும் போராடி வருகிறார்கள்.
மன்னிக்க மாட்டார்கள்
ஐந்து வருடங்களாக கோடை காலம் வந்தது. அப்பொழுதெல்லாம் குடிப்பதற்கு கூட தண்ணீர் விடவில்லை. ஆனால் தற்பொழுது புதிதாக கோடைகால சிறப்பு நிதி என்று 2000 ரூபாய் கொடுக்கிறார்கள். தற்பொழுது பள்ளி கல்லூரிகளில் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை பேருந்து நிலையம் ரயில் நிலையம் என்று எங்குமே பாதுகாப்பு கிடையாது.
எப்பொழுது வெளியில் சென்ற பெண்கள் வீடு திரும்புவார்கள் என்று வீட்டில் உள்ளவர்கள் பதற்றத்துடனே இருக்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் தமிழக பெண்கள் அதனை மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். வீட்டுக்கு போவது உறுதி.
நயினார் பேசியது வருத்தம்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மிகவும் அமைதியாக, பண்பாக பேசக்கூடியவர். சட்டப்பேரவையில் நான் கூட ஆக்ரோஷமாக பேசுவேன். ஆனால் அவர் மிகவும் நாகரிகமாக பேசுவார். அவர் எதற்காக திரிஷா பற்றி அவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை அவர் பேசியது வருத்தமாக தான் உள்ளது. எனது கருத்தை அவரிடம் நான் கூறுவேன்.
அதேசமயம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் கட்சி பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. கட்சி நிர்வாகிகளே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற பேச்சாளரை இன்றும் கட்சியில் வைத்துள்ளார்கள், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது.
ஆனால் திடீரென பெண்களுக்கு அவமானம் நடந்தது போன்று சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் கண்டனம் தெரிவிப்பதற்கு, கருத்து தெரிவிப்பதற்கு திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதையே கிடையாது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications