கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில்.. 5 மணி நேரத்தில் பறக்கலாம்.. எப்படி இருக்க போகிறது?
கோவை: கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் விட்டால் ஐந்து மணி நேரத்தில் போய்விட முடியும். எனவே இந்த ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பெங்களூரு இடையே வர்த்தக ரீதியாக பலமான இரு நகரங்களுக்கு இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் என முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் இருக்கின்றன. இந்த நகரங்களில் நிறுத்தங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது வந்தே பாரத் ரயில் சென்னை கோவை இடையே வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதுதவிர சென்னை மைசூர் இடையேயும் வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இந்த இரு ரயில்கள் இல்லாமல் சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரு கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் கோவை பெங்களூரு இடையே தினசரி 7 முதல் 9 ரயில்கள் செல்கின்றன. இதில் கோவையில் இருந்து செல்லும் ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் 6 மணி நேரம் 43 நிமிடங்களில் பெங்களூரு செல்கிறது. மற்ற ரயில்கள் சராசரியாக 7 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகின்றன. இது தவிர பகல் நேரத்தில் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் பாதி ரயில்கள் கேரளாவில் இருந்து வருபவவை. வரும் போதே கேரளாவிலேயே ரயில்களின் கூட்டம் நிரம்பி விடும்.
தினமும் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு ஏராளமான மக்கள் சென்றுவருகிறார்கள். அத்துடன் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் தினமும் பெங்களூரு சென்று வருகிறார்கள். ஐடி நகரமான பெங்களூருவும், டெக்ஸ்டைல் நகரமான கோவையும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு தருகிறது. ஜவுளி துறையுடன் ஐடி துறையும் கோவையில் வேகமாக வளர்ந்து வருவதால் . கோவை பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை-பெங்களூரு வழித்தடம் மற்ற வழித்தடங்களை போல் இல்லாமல் முற்றிலும் தொழில் நகரங்களை கொண்ட வழித்தடம். எனவே நிச்சயம் ரயில்வேக்கு வந்தே பாரத் ரயிலால் அதிக வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை கோவை பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் விட்டால் பயண நேரம் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆகிவிடும் என்றும், தற்போது 7 மணி நேரமாக இருப்பதாகவும் ரயில பயணிகள் கூறுகிறார்கள். பெங்களூரு கோவை இடையே எந்த ஆம்னி பேருந்தாலும் ஐந்து மணி நேரத்தில் செல்ல முடியாது என்பதால் மக்கள் பலரும் வந்தே பாரத்தில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது."
வழித்தடம் எப்படி இருக்க வேண்டும்: பெங்களூரு கோவை இடையில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களை வழித்தடமாக இயக்க வேண்டும் என்றும் பகல் நேர ரயிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமாக இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
இதனிடையே கோவை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே சொல்கிறார்கள். கோவை பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார் வகுப்பில் 1,315 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் கார் வகுப்பில் 2,275 ரூபாயும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இதனுடன் உணவு கட்டண தனியாக இருக்கும் என்கிறார்கள். 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications