"கோவையின் வாஜ்பாய்" குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு இந்த பெயர் வரக் காரணம் என்ன?
டெல்லி: குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணன் கோவையின் வாஜ்பாய் என்று அழைக்கப்பட்டு வருகிறார். அதற்கான காரணம் குறித்து சிபி ராதாகிருஷ்ணனே விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் சிபி ராதாகிருஷ்ணனை அந்த பதவிக்கு கொண்டு வந்துள்ளதன் மூலமாக பாஜகவின் அரசியல் கணக்குகளும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பாஜக கூட்டணி சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டாலும், சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாகவே இருந்தது. அதற்கேற்ப 452 வாக்குகள் பெற்று சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக கொண்டு வரப்பட்டதற்கு பின் பல்வேறு அரசியல் கணக்குகளும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ்காரருக்கு வாய்ப்பு அளித்துள்ளது என்றும் சொல்லலாம். ஏனென்றால் 16 வயதிலேயே சிபி ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்தவர். இதற்கு முன்பாக குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் ஜனதா தளத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்று பின் பாஜகவுக்கு வந்தவர். ஆனால் சிபி ராதாகிருஷ்ணன் தொடக்கம் முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக செயல்பட்டவர்.
ஆர்எஸ்எஸ் விஸ்வாசி என்பதால், இவர் தேர்தல் அரசியலில் பெரிய வெற்றிகளை பெறவில்லை என்றாலும், பாஜக அவருக்கு உரிய மரியாதை அளித்து ஆளுநர் பதவியை அளித்தது. இவர் ஏற்கனவே கோவை மக்களவை தொகுதியில் இருந்து 2 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 1998ஆம் ஆண்டு அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து வென்ற போதும், பின்னர் ஆட்சி கவிழ்ந்து திமுக - பாஜக கூட்டணி அமைந்த போது 1999ஆம் ஆண்டும் வென்றவர்.
என்னதான் கூட்டணி மாறினாலும், தலைவர்களுடன் இவர் நல்ல நட்புறவுடன் இருந்தவர். இதனால் சிபி ராதாகிருஷ்ணனை கோவையின் வாஜ்பாய் என்று அக்கட்சியினர் அழைத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் 1990களில் சிபி ராதாகிருஷ்ணன் அமைச்சராக வேண்டிய சூழல் வந்த போது, கடைசி நேரத்தில் மிஸ்ஸாகியது. அதன்பின் 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்ட போதும், சிபி ராதாகிருஷ்ணனால் வெற்றி பெற முடியவில்லை.
அதேபோல் சிபி ராதாகிருஷ்ணன் மிகவும் சாதுவான குணம் கொண்டவர். எந்த சூழ்நிலையிலும் ஆவேசப்படவோ, கோபத்தையோ வெளிக்காட்ட மாட்டார். இதன் காரணமாகவே 2004ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதன்பின் 2023ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட அவர், அதன்பின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஆளுநராக செயல்பட்டார்.
மேலும் கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக சிபி ராதாகிருஷ்ணன் அளித்த நேர்காணல் இன்றும் பிரபலமான ஒன்று. அதில், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது நான் தீவிரவாதத்திற்கு எதிராக இருந்தேனே தவிர, இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை. சில இஸ்லாமியர்கள் என்னிடம் உதவி கோரினார்கள்.
அப்போது போலீசாரிடம் நேரடியாக சென்று, குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று முறையிட்டேன். அதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. அதன் காரணமாக கோவையின் வாஜ்பாய் என்று அழைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேசிய அளவில் ஓபிசி அரசியல் தீவிரமாகி வரும் நிலையில், குடியரசு துணைத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் கொண்டு வரப்பட்டிருப்பது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதேபோல் கோவை கவுண்டர்கள் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக சட்டசபைத் தேர்தலில் இது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
