சிக்கிய ‘எம்.புக்’ - கான்டிராக்டர் ஆபீசுக்கு வந்தது எப்படி? - துருவித் துருவி விசாரித்த விஜிலென்ஸ்!
கோவை : மாநகராட்சி அதிகாரியிடம் இருக்க வேண்டிய எம்.புக், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரின் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மாநகராட்சி பொறியாளரின் எம்.புக், வேலுமணி ஆதரவாளரின் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்டதால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அலுவலக விருந்தினர் மாளிகையில் நடத்திய விசாரணையில், பொறியாளர்கள் சிலர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு
அ.தி.மு.க ஆட்சியில், கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்தபிறகு சமீப நாட்களாக இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதிரடி சோதனை
இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெருக்கமான புள்ளி
எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான ஒப்பந்ததாரர் ஒருவரின் வீடு, அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது வீடு, அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். அதில், ஒப்பந்ததாரர் ஒருவரின் 10 கோப்புகள் மற்றும், எம்-புக் எனப்படும் மாநகராட்சி உதவி பொறியாளரின் அளவீட்டு புத்தகம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

எம்-புக்
அரசின் உதவி/ இளநிலை பொறியாளர்களுக்கு ஒரு புத்தகம் வழங்கப்படும். அதுதான் எம்.புக். மாநகராட்சி நிதியில் எந்தப் பணி செய்வதாக இருந்தாலும், அந்த புத்தகத்தில் எழுதி கையெழுத்திட வேண்டும். அதைத்தொடர்ந்து உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர், நகர பொறியாளர் என அனைத்து அதிகாரிகளும் அந்த எம்.புக்கில் கையெழுத்திடுவார்கள்.

அங்கு சென்றது எப்படி
இந்த எம்.புக்கை வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் ஒருவரின் நிறுவனத்தில் இருந்து கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். மாநகராட்சி பொறியாளர்களிடம் இருக்க வேண்டிய எம்.புக் காண்டிராக்டரின் அலுவலகத்திற்கு வந்தது எப்படி என மாநகராட்சி அதிகாரிகளிடம் துருவித் துருவி விசாரித்துள்ளனர்.

வேறொரு காண்டிராக்டரின் ஃபைல்
மேலும், வேலுமணிக்கு நெருக்கமானவரின் ஒப்பந்த நிறுவன அலுவலகத்தில் வேறொரு ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட கோப்புகளும் சிக்கியுள்ளன. அந்த ஒப்பந்ததாரரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரித்தபோது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் கோரியபோது, குறைந்தபட்ச ஒப்பந்தப்புள்ளி கோரியதால், பல வேலைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், என்னை பணி செய்ய விடாமல் தடுத்து விட்டனர் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை வளையத்தில்
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அந்த காலகட்டத்தில் பணிகள் செய்த, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்தது. அதன்படி, நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்துக்குள் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் கிளார்க்குகள் உள்ளிட்ட பலரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அச்சத்தில் அதிகாரிகள்
இந்த விசாரணையில், பொறியாளர்கள் சிலர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் தீவிர விசாரணை வளையத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை கொண்டு வந்திருக்கிறதாம். இந்தச் சம்பவங்கள் கோவை மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications