கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி.. இதுதான் ஸ்டாலின் செய்ற சாதனை.. எஸ்பி வேலுமணி அட்டாக்
கோவை: திமுகவுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுகவில் வாரிசு அரசியல் நடந்து வருவதாகவும் அவர் சாடினார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் திமுக அரசைக் கண்டித்தும், கோவை மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குணியமுத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, "மாநகராட்சி நூறு வார்டுகளிலும் இன்று திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம்.. திமுக இரண்டு வருடம் ஆட்சியை நெருங்கியுள்ளார்கள்.. கோவை குனியமுத்தூருக்கு ஏதாவது ஒரு திட்டத்தைச் செய்துள்ளாரா? அதிமுக ஆட்சியில் சாலைகள் எப்படி வைத்திருந்தோம்.. ஆனால் இப்போது சாலைகள் எப்படி உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.

பரபர அட்டாக்
அதிமுக ஆட்சி இருந்தபோது 50 ஆண்டுக் கால வளர்ச்சியைக் கோவைக்குக் கொடுத்தோம்.. சாலைகள் அகலப்படுத்திப் போட்டோம்.. கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 20 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்ற நிலையே இருந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக தற்பொழுது மேம்பாலப் பணிகளை திமுகவினர் முடக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.. இந்த திமுக அரசு மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டு வருகிறது. பொங்கலுக்கு கரும்பு வாங்கக் கூட போராட்டம் நடத்த வேண்டியதாக உள்ளது..

ஒரே சாதனை
ஸ்டாலின் செய்த ஒரே சாதனை மகனை அமைச்சராக்கியதுதான்.. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அப்புறம் இன்பநிதி என்று தான் வருவார்கள்.. நீட் இருக்கும் போதும் கூட, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில ஏதுவாக எடப்பாடி பழனிசாமி 7.5 இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்.. ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் வெறுமன திராவிட மாடல் ஆட்சி என ஸ்டாலின் சொல்லி வருகிறார். இது என்ன திராவிட மாடல் ஆட்சி? தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது!

வாக்குறுதிகள் என்னாச்சு
மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் சொன்னீர்களே ஆனால் கொடுத்தீர்களா.. திமுக ஆட்சியில் சொத்துவரி தொடங்கிப் பல வரிகள் உயர்ந்துள்ளது.. திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்பிக்களும் அடிமையாக இருக்கிறார்கள்.. அவர்கள் என்ன செய்தார்கள்? திமுகவிடம் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகளும் அடிமையாக உள்ளது.. தமிழ்நாட்டில் இப்போது பெரிய கட்சி அதிமுக தான்.. தைரியம் இருந்தால் ஒத்தைக்கு ஒத்தை நிற்கலாம்.. அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியை வெல்வோம்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்
அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் கூடவே சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரும்.. அப்போது அதிமுகவுக்குத் தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள். திமுக கூட்டத்தில் பெண் போலீசாரை மானபங்கம் செய்துள்ளார்கள்.. இதில் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் தாமதப்படுத்தியுள்ளனர். திமுக ஆட்சியில் பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்ற சூழலே உள்ளது. அப்படியிருக்கும் போது, மகளிரின் பாதுகாப்பு குறித்துச் சொல்லவா வேண்டும்.

நாங்கள் செய்வோம்
அது மட்டுமின்றி திமுக ஆட்சியில் அதிகாரிகள் யாரும் வேலை செய்வதில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கையைக் கூட மேற்கொள்வதில்லை.. அதிகாரிகள் பணி செய்வதில்லை.. அடுத்த தேர்தலில் வென்று நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வோம்.. அப்போது திமுக செய்யாததை நாங்கள் வந்து செய்வோம்.. மின் கட்டணம், சொத்து வரி, பால் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.. பொதுமக்கள் தற்போது ஏன்டா இவர்களுக்கு ஓட்டுப் போட்டோம் என்றே நினைத்து புலம்பி வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications