வீட்டுக்குள் இருந்த 2 டன் குப்பை.. நள்ளிரவு பூஜை.. கோவை மர்ம வீடு பற்றி பரவிய வதந்தி! நிஜம் இதுதான்
கோவை: வீட்டில் 2,000 கிலோ குப்பை, அதனுடன் கரப்பான் பூச்சி, எலி.., மூட்டைப்பூச்சி.., சிறு பாம்பு உட்பட ஒரு டஜன் ஜந்துக்கள்.., ஆங்காங்கே எரிந்து கருகிய நிலையில் தொங்கும் ஸ்விட்ச் பாக்ஸ்கள்.., ஒரே ஒரு லோ வோல்டேஜ் லைட் .. என்று நம்மால் கற்பனையே செய்து பார்க்க முடியாத ஒரு வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிஉலக தொடர்பு இல்லாமல் வசித்து வருகின்றனர் ஒரு தாயும், மகளும்.
கோவை, ராம்நகர் பகுதி அப்பார்ட்மென்டில் உள்ள அந்த வீட்டில் நள்ளிரவு பூஜை, ஜடாமுடி மூதாட்டி வசிப்பதாக திகில் கிளப்பும் செய்திகள் பரப்பப்படுகின்றன. கோவை மர்ம வீடு (Coimbatore mystery house) என்று அழைக்கப்படும் இந்த வீடு எங்கே உள்ளது, ஏன் இப்படி திடீரென இது வைரலாகிறது. "ஒன்இந்தியாதமிழ்" ஸ்பாட்டுக்கே சென்று விசிட் அடித்து பெற்ற முழு தகவல் உங்களுக்காக..

கோவை ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி. இவருக்கு சுமார் 40 வயதில் ஒரு மகள் உள்ளார். பெரிதாக வெளியுலக அனுபவம் தெரியாத இந்த தாயும், மகளும் தந்தையின் (மூதாட்டியின் கணவர்) பாசத்திலும், அரவணைப்பிலும் வாழ்ந்து வந்தனர்.
கடைக்குச் செல்வது, குப்பை கொட்டுவது, குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது என எல்லாவற்றையுமே தந்தையே செய்து வந்துள்ளார். இவரது மகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர்கள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், மெத்த படித்தவர்களாகவும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
மேலும், வங்கிப் பரிவர்த்தணை உள்பட அனைத்து வசதிகளும் இவர்களது டோர் ஸ்டெப்புக்கே வந்துள்ளன. இந்த வீடு தவிர பல வீடுகள் இவர்களுக்கு சொந்தமாகவும் உள்ளது.

அழகாய் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் இடியாய் வந்திறங்கியது தந்தையின் இறப்பு சம்பவம். ஆம், மூதாட்டியின் கணவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் தாயும், தந்தையை இழந்த துக்கத்தில் மகளும் கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகினர். அவர் தான் உலகம் என்ற நிலையில், அவரின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.
இதனால், வீட்டை சரியாகப் பராமரிக்காமல் சாப்பிடும் குப்பையை அந்த இடத்திலேயே போடுவது, குப்பையை அகற்றாமல் இருப்பது என கிட்டத்தட்ட 2,000 கிலோவுக்கு மேலான குப்பைக்கூளத்துக்கு நடுவில் வாழ்ந்து வந்தனர்.
அபார்ட்மெண்டில் வெகுசிலருடன் மட்டுமே பேசுவார்கள். தந்தை இருக்கும்போதே அந்த வீட்டில் எப்போதும் பூஜைகள் நடக்கும். இப்போது நள்ளிரவில் கூட சில பூஜைகள் நடக்கின்றன என்ற தகவலும் பரவியது.
மேலும், வீட்டில் உள்ள ஓர் அறையில் தீப்பிடித்த நிலையில் அதைக் கூட வெளியில் சொல்லாமலும், மருத்துவம் உள்ளிட்ட எமர்ஜென்சி சூழ்நிலைகளுக்கும் கூட வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்துள்ளனர்.
தொடர்ந்து வரும் மர்ம தகவல்களாலும், சுகாதார சீர்கேட்டாலும் இதற்கு தீர்வு காண அபார்ட்மென்ட்வாசிகள் முடிவெடுத்தனர். தன்னார்வலர்கள் மற்றும் கோவை மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து 2 லாரிகளில் குப்பைகளை ஏற்றிச் சென்றனர்.
இதுபோக, மேலும் அந்த வீட்டில் குப்பைகள் உள்ளதாகவும், அதனை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இந்த தகவல் பல்வேறு ஊடகங்களில் வெளியான நிலையில், அந்த தாயும், மகளும் கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த அபார்ட்மென்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் "ஒன்இந்தியாவிடம்" கூறியதாவது: ஊடகங்களில் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி சொல்லியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட சிலருடன் பேசுவார்கள். அவ்வப்போது வராண்டாவில் நடப்பார்கள்.
மூதாட்டியின் கணவர் உயிரிழந்த நிலையில் கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அதனால், குப்பையை வீட்டிற்குள்ளேயே அகற்றாமல் வைத்துள்ளனர். இதுகுறித்து எங்களுக்கு தெரியவந்ததை அடுத்துதான் தன்னார்வலர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தோம். அப்படித்தான் இந்த விசயம் வெளியில் வந்தது. மன அழுத்தத்தில் உள்ள அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும். அதுதான் இப்போதைய தேவை என்றார்.

அப்பார்ட்மென்டில் உள்ள சில நல்ல உள்ளங்கள் மூலமாகத்தான் இப்படி ஒரு வீடு இருப்பது வெளியில் தெரிந்தது. அதே அபார்ட்மென்டில் அவர்களின் உறவினர்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களை, உங்களை யார் வரச்சொன்னார்கள், திருட்டு வழக்கு கொடுத்துவிடுவோம். எங்கள் அப்பார்ட்மென்ட் குறித்து செய்திகளில் தவறான தகவல்களை வரவைத்து பெயரை கெடுத்துவிட்டீர்கள் என்று அதிகாரிகளையே மிரட்டுகின்றனர்.
மேலும் தாய் மகள் வீட்டை சுத்தம் செய்து, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் அவர்களின் உறவினர்களும், அப்பார்ட்மென்ட் குடியிருப்போர் நல சங்கமும் தடையாக உள்ளார்கள். முதலில் அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதே அத்தியாவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications