அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு கொந்தளித்த மீனா ஜெயக்குமார்.. திமுகவிலிருந்து நீக்கம் ஏன்? பின்னணி
கோவை: உங்கள் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க என் வாய்ப்பை மறுப்பதா என திமுக எம்எல்ஏ கார்த்திக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு ஒருமையில் பேசியிருந்த நிலையில் திமுகவின் மகளிர் அணி துணை செயலாளராக இருந்த மீனா ஜெயக்குமார் அதிரடியாக நீக்கப்பட்டார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார். இவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வென்றது. பின்னர் மேயருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை திமுகவினர் போட்டி போட்டு கொண்டு பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சியிலிருந்து நீக்கம்
இதையடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என சாட்டையை சுழற்றினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இது ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், அதே மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ கார்த்திக் முன்னிலையில் அவரது மனைவிக்கு எதிராக முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேயர் கனவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், பேசினார். மேயர் கனவோடு இருந்த அவர் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டிருந்தார்.

பொண்டாட்டிக்கு சீட்
ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் செயற்குழு கூட்டத்தில் தனது பேச்சின் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில் திமுக எம்எல்ஏ கார்த்திக்தான் எனது வெற்றியை தடுத்தார் என்றார். அமைச்சர், எம்எல்ஏ என மேடையில் இருக்கும் போது, மீனா, உன் பொண்டாட்டிக்கு சீட் வேணும்னா நீ கேட்டு வாங்கு, அதற்காக என் வாய்ப்பை ஏன் தடுக்கிற? என மீனா பேசினார்.

பட்டியலினம்
நான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என கூறி என்னை ஓரங்கட்டுகிறார் எம்எல்ஏ கார்த்திக். நான் எல்லாரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அப்படியிருந்தும் சீட் கிடைக்கக் கூடாது என்பதால் தலைமை வரை என்னை பற்றி எதையோ சொல்லிவிட்டார் என மீனா பேசியிருந்தார். அங்கு எம்எல்ஏ கார்த்திக் ஆதரவாளர்கள் கூச்சல் இட்டனர். மேடையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியும் அவர் இது போல் ஒருமையில் பேசியதால் இன்று மீனாவின் பதவி பறி போனது.












Click it and Unblock the Notifications