பல்லடத்தில் ஆட்கடத்தல் வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. எல்லாம் "பிஸ்கெட்" படுத்தியபாடு.. நடந்தது என்ன?
கோவை: இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் தான் இந்த ஆள் கடத்தலுக்கு முக்கிய காரணம் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் வசிப்பவர் பாக்கியவதி. தனது வீட்டில் ஒன்றரை மாதமாக குடியிருப்பவரும் ஓட்டுநருமான சக்தி (எ) மகேஸ்வரன் என்பவரோடு கடந்த 26ஆம் தேதி சொந்த வேலையாக தாராபுரம் சென்றுவிட்டு திருப்பூர் வந்து கொண்டிருந்தனர்.
சக்தியை அவரது நண்பரான அழகர்சாமி என்பவர் தொலைபேசியில் அழைத்து பல்லடத்தில் தான் இருப்பதாகவும் அவரை உடனே சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல்லடம்- கோவை
நண்பரை சந்திக்க பல்லடம்- கோவை சாலையில் பெரும்பாளி அருகே 3 கார்களில் 7 பேர் வந்தனர். அப்போது சக்தியின் காரை வழிமறித்து அதிலிருந்த சக்தியை கத்தி முனையில் அவர்கள் வந்த காருக்கு இழுத்து சென்று கடத்தியுள்ளனர். இந்த நிகழ்வு சம்பந்தமாக காருக்குள் இருந்த பாக்கியவதி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சக்தியை தேடி வந்தனர்.

கடத்தல்
இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில் சக்தியை கடத்துவதற்காக அவரது நண்பர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணிகண்டன், அழகர்சாமி ஆகிய இருவரை ஏற்கெனவே கடத்தியதும் அவர்களை காரில் அழைத்து வந்ததும் தெரியவந்தது.

கடத்தல்காரர்கள்
சக்தி, வீரமணிகண்டன், அழகர்சாமி ஆகியோருடன் கடத்தல்காரர்கள் கீரனூர் பகுதியில் மேல்கரைபட்டி காட்டு பகுதியில் மறைந்திருந்தனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட மூவரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை காட்டு பகுதியிலிருந்து கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தப்பியோடி வந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கட்சி நிர்வாகியிடம் சக்தி பணியாற்றி வந்ததும் இலங்கையிலிருந்து தங்க பிஸ்கெட்டுகளை கடத்தி வரும் வேலைக்கு உருதுணையாக இருந்ததும் தெரியவந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்னர் தங்க பிஸ்கெட் பரிவர்த்தனையின் போது சக்தி 5 கிலோ தங்கத்தை இலங்கையிலிருந்து கடத்தி வந்தார். அப்போது ராமநாதபுரத்தில் போலீஸ் உடையில் இருந்தவர்கள் துரத்தியதாகவும் அந்த தங்கத்தை அவர்களிடம் விட்டுவிட்டு சக்தி தப்பியதாகவும் தனது ஓனரிடம் தெரிவித்தும் அவர் அதை ஏற்கவில்லை என தெரிகிறது.

கடத்தல் தங்கம்
இந்த நிலையில் அந்த கட்சி நிர்வாகியிடம் கடத்தல் தங்கத்திற்காக முதலீடு செய்தவர்கள் தொடர்ந்து தங்கம் குறித்த கேட்டதால் சக்தியை கடத்தி அந்த கும்பலிடம் அந்த கட்சி நிர்வாகி ஒப்படைத்தது தெரியவந்தது. முதலில் அந்த கும்பல் சக்தியின் நண்பர்களை கடத்திவிட்டு பின்னர் சக்தியை கடத்தியது தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முகமது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கட்சி நிர்வாகி மீது ஏற்கெனவே தங்கக் கடத்தல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications