இலங்கையில் அதிகரிக்கும் அதானி குழுமத்தின் முதலீடு! இரு முக்கிய திட்டங்கள் கையெழுத்தானது
கொழும்பு: அதானி குழுமம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இரண்டு பெரிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவின் பெருநிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் சர்வதேச அளவிலும், குறிப்பாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் பல்வேறு திட்டங்களை அதானி குழுமம் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கொழும்பு நகரில் அமைந்துள்ள முக்கிய துறைமுக திட்டம் ஒன்றை அதானி குழுமம் கைப்பற்றியது.

அதானி குழுமம்
இந்நிலையில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இரண்டு பெரிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களையும் இப்போது அதானி குழுமம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின் வடமேற்கு கரையோரத்தில் உள்ள மன்னார் மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு தெற்கே அமைந்துள்ள பூனேரியில் புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தைத் தான் அதானி குழுமம் கைப்பற்றி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வெளிப்படைத்தன்மை இல்லை
அதேநேரம் இந்த திட்டம் குறித்து முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனச் சிலர் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். திட்டம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகக் கொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் சில தகவல்களை சண்டே மார்னிங் என்ற மற்றொரு வார இதழ் வெளியிட்டுள்ளது.

என்ன திட்டங்கள்
இந்த இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், 500 மில்லியன் டாலர் செலவில் 500 மெகாவாட் திறனை உருவாக்குவதை இலக்காகக் கொண்டதாக உள்ளது. இரண்டு திட்டங்களும் வட மாகாணத்தில் செயல்படுத்தப்பட உள்ளன. இது தமிழ்நாடு கடற்கரைக்கு அருகாமையில் உள்ளதால், கடந்த ஆண்டு இதே இடத்தில் சீன நிறுவனங்கள் எரிசக்தி திட்டத்தை நிறைவேற்ற இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டது. இதே நாளில் கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் 100 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க இந்தியாவின் தேசிய அனல் மின் கழகமும் (NTPC) மற்றும் இலங்கை மின்சார சபையும் (CEB) ஒப்பந்தம் மேற்கொண்டன.

முதலீடு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி இலங்கைக்குச் சென்று அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருதது குறிப்பிடத்தக்கது. வடக்கு மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் இலங்கை அரசு ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்தியாவின் முதலீடும் அதில் அதிகரித்துள்ளது.

பற்றாக்குறை
இலங்கையின் தினசரி மின் தேவை 2000 மெகாவாட்டிற்கு மேல் உள்ளது. இப்போது கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் ஏற்கனவே கடுமையான எரிபொருள் மற்றும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மின்வெட்டை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது, இதனால் பல நாடுகளில் இருந்து பொருளாதார உதவிகளைப் பெற இலங்கை முயன்று வருகிறது.

விமர்சனம்
இந்தியா இதுவரை இந்த ஆண்டு 1.4 பில்லியன் டாலர்களை அளித்துள்ளது. அதேநேரம் இந்தியாவின் உதவி குறித்து இலங்கையில் உள்ள சிலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.. இந்திய ரிசர்வ் வங்கியில் 631 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி உள்ள நிலையில், அதில் இலங்கை ஒரு பில்லியன் டால் மட்டுமே கேட்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கையின் சண்டே டைம்ஸ், அதற்குப் பதிலாக இலங்கை சில திட்டங்களில் கையெழுத்திட வேண்டும் என இந்தியா பிளாக் மெயில் செய்வதாகச் சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications