ஈழத் தமிழர் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம்- பகிரங்கமாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எதிர்ப்பு!
கொழும்பு: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கொழும்பில் தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் பகிரங்கமாகவே எதிர்த்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா. மேலும் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாகாண சபைகளை இலங்கை அரசு உடனே நடத்த வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
சர்வதேச அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகள் அணிகளாக சேருவது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து வலுவான கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இதற்கு பிரான்ஸ், சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இன்னொரு பக்கம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து குவாட் எனும் அமைப்பை முன்னெடுத்து நடத்தி வருகின்றன. இந்த முயற்சியும் இந்தோ-பசிபிக் மற்றும் தென்சீன கடல் பிராந்தியத்தில் சீனாவுக்கு செக் வைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க்கில் சந்தித்து பேசியிருந்தார்.

ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை பயணம்
இதனையடுத்து கடந்த சனிக்கிழமையன்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை பயணம் மேற்கொண்டார். இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தொடங்கி வைத்தார். இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் அவர் பார்வையிட்டார். இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தொடங்கி வைத்தார்.

தமிழர் தலைவர்களுடன் சந்திப்பு
மேலும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஷ் ஆகியோரையும் கொழும்பில் சந்தித்தார் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா. இதன்பின்னர் கொழும்பில் இந்திய தூதர் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சந்தித்து பேசினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான சுமந்திரன் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு
கொழும்பில் செய்தியாளர்களிடம் சுமந்திரன் கூறியதாவது: இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியா பெருமளவு முதலீடு செய்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அப்படியான சூழ்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் 3-வது அன்னிய நாட்டின் பிரசன்னத்தை (சீனா) இந்தியா ஊக்கப்படுத்தாது என இச்சந்திப்பில் ஷ்ரிங்லா கூறினார். மேலும் 1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதையும் அவர் திட்டவட்டமாக கூறினார். இந்த 13-வது திருத்தத்தின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் ஷ்ரிங்லா, பஷில் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினார். ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என பஷில் ராஜபக்சே கூறியிருக்கிறார்.

இலங்கை அரசுகள் மீது அதிருப்தி
இலங்கை அரசாங்கமானது யுத்த காலத்திலும் யுத்தத்துக்கு பிந்தைய காலத்திலும் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதுவரையிலான இலங்கை அரசுகள் இந்த வாக்குறுதிகளைப் பற்றி எந்த கவலையும்படவில்லை என்கிற கவலையையும் அவர் பகிர்ந்து கொண்டார். இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தம் மூலமாக முழுமையான அதிகாரப் பகிர்வை நோக்கி இலங்கை அரசு நகர வேண்டும் என்பதுதான் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

அடுத்த சந்திப்பு டெல்லியில்
இதையடுத்து ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் பேசிய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் இந்தியா முழுமையான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றனர். 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பங்களிப்புக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் எனவும் தமிழ்க் கட்சி தலைவர்கள் கூறினர். 1987-ம் ஆண்டு இந்தியா தலையிட்டதால்தான் இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தம் கிடைத்தது. ஆகையால் தொடர்ந்தும் இந்தியாவின் தலையீடு அவசியம் எனவும் தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பேசிய ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, டெல்லியில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இவ்வாறு சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்












Click it and Unblock the Notifications