"துயர் துடைக்கும் இந்தியா.. எங்களுக்கு எப்போதும் உதவும் ஒரே நாடு.." இலங்கையிலிருந்து வந்த பாராட்டு
கொழும்பு: இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்கு உதவிகளை இந்தியா அறிவித்துள்ளது. இதற்கிடையே இலங்கையின் துயர் துடைக்கும் நிரந்தர நாடாக இந்தியா இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் அலி சாப்ரி புகழ்ந்துள்ளார். இலங்கைக்குச் சிக்கல் ஏற்படும்போது எல்லாம் இந்தியாவே முழு மூச்சாக இறங்கி உதவுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் அதிதீவிரக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியது.

இலங்கையில் இருந்து வந்த பாராட்டு
ஆபரேஷன் சாகர் பந்த் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவின் உதவிகளைப் பாராட்டியுள்ள இலங்கையின் முன்னாள் வெளியுறவு மற்றும் நிதி அமைச்சரான அலி சப்ரி, இந்தியாவின் இந்த நடவடிக்கையை அற்புதமானது என்றும் உதவி தேவைப்படும் நேரத்தில் சரியாக உதவியுள்ளது என்றும் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் விரைவான உதவி பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவிக்கு ஒரு புதிய முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று சப்ரி தெரிவித்தார். 2022ல் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் இந்தியா உதவியதாகவும் இப்போதும் புயல் பாதிப்புகளில் இருந்து சமாளிக்க நிவாரணப் பணிகளில் இந்தியா உதவுவதாக அவர் பாராட்டினார்.
முதல்முறை இல்லை
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இதுபோல இந்தியா உதவுவது இது முதல்முறை இல்லை.. பல முறை எங்களுக்குத் தொடர்ச்சியாக உதவியுள்ளது. இந்தியா எப்போதும் ஒரு சிறந்த நண்பராகவும், சிறந்த அண்டை நாடாகவும் இருந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியின்போது நான் நிதி அமைச்சராக இருந்தபோது, இந்தியா பல உதவிகளைச் செய்தது
இரு நாடுகளிலும் உள்ள அரசுகள் மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளது. கடந்த 20, 30 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவு இருந்துள்ளது. இலங்கையில் ஏற்படும் நெருக்கடிகளின்போது இந்தியா முதலில் வந்து உதவியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் சரியான நேரத்தில் எங்களுக்கு உதவியுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைவராக இந்தியா இருக்கிறது.. அந்த தலைமைப் பண்புக்கு ஏற்றவாறு செயல்படுகிறார்கள்.
எப்போதும் உதவியுள்ளது
எப்போதும் பிராந்தியங்கள் ஒன்றாக வளரும். அதில் எதாவது ஒரு நாடு தலைமையில் இருக்கும். இங்கு இந்தியா தனது பங்கை ஆற்றி வருகிறது. இந்தியாவின் அணுகுமுறை இலங்கைக்கு நெருக்கடிக் காலங்களில் மட்டுமல்லாமல், இயல்பான பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்திய உதவிக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இந்த பிராந்தியத்தில் பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம், இந்தியா எப்போதும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது எதிர்காலத்திற்கான ஒரு முன்மாதிரியாக அமைகிறது. இலங்கை போன்ற சிறிய தீவு நாடுகள் நெருக்கடியில் தள்ளப்படும்போது பெரிய நாடுகளின் உதவிகள் தேவை. இந்தியா முதலில் வந்து உதவும்போது நம்பகத்தன்மை ஏற்படுகிறது. தொடர்ந்து மற்றவர்களும் உதவுகிறார்கள். இந்த புயலின் போது கூட இந்தியா உதவி அறிவித்தது. இன்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் அதைப் பின்பற்றின.
இந்தியாவின் பங்கு
பேரிடர் நிவாரணத்தில் மட்டுமல்லாமல், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளிலும் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது. இதற்காக இந்தியாவைப் பாராட்ட வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
டிட்வா புயல் பாதிப்பைத் தொடர்ந்து இந்தியா பல உதவிகளைச் செய்து வருகிறது. கடல் மார்க்கமாக அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி வருகிறது. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பல டன் உணவுகளைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுப்பியது. மேலும், விக்ராந்த் கப்பலில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப்படை வீரர்களுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இணைந்துள்ளன.












Click it and Unblock the Notifications