தமிழர் சாபம் பலித்தது-சிங்களர் ஆதரவுடன் தமிழர்களை அழித்த மகிந்த ராஜபக்சே சிங்களராலேயே விரட்டியடிப்பு
கொழும்பு: எந்த சிங்களர் ஆதரவு தமக்கு இருக்கிறது என்கிற இறுமாப்புடன் பல லட்சம் அப்பாவி ஈழத் தமிழரை மகிந்த ராஜபக்சே கொன்று குவித்தாரோ அதே சிங்களராலேயே பிரதமர் பதவியில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டு அலரி மாளிகையில் இருந்து துரத்தப்பட்டுள்ளார்.
Recommended Video
ஆங்கிலேயர் பேராதிக்கத்தில் இருந்து இலங்கை விடுதலை அடைந்தது முதலே சிங்கள பேரினவாதமே கட்டவிழ்த்துவிடப்பட்டது. வட இந்தியாவில் இருந்து குடியேறிய விஜயன் வம்சாவளி சிங்களர், அந்த நிலத்தின் பூர்வகுடிகளான தமிழரை 2-ம் தர மக்களாக நடத்தி இன அழிப்பு செய்தனர்.

இத்தகைய இன அழிப்புக்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய ஈழத் தமிழர்கள் உலகமே வியக்க ஆயுதம் தாங்கிய யுத்தம் நடத்தினர். சர்வதேசத்தின் அத்தனை போக்குகளையும் உள்வாங்கி உலக ஒழுங்குக்கு அமைய அமைதிப் பேச்சுகளையும் ஈழத் தமிழர்கள் முன்வைத்தனர்.
ஆனால் 2006-ல் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே, சிங்கள மக்கள் அத்தனை பேரும் தம் பக்கமே என்ற இறுமாப்புடன் அமைதிப் பேச்சுகளை சீர்குலைத்து அக்கிரம யுத்தத்தை முன்னெடுத்தார். அப்போது ஒட்டுமொத்த உலக தேசங்களும் மகிந்த ராஜபக்சே எனும் பேரினவாதிக்கு முட்டுக் கொடுத்து ஆயுதங்களை வாரி வழங்கின. 2009-ம் ஆண்டு மே 18- வரையிலான தமிழர்கள் மீதான இறுதி யுத்தத்தில் பல லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்களை ஈவிரக்கமே இல்லாமல் படுகொலை செய்தது ராஜபக்சே கும்பல்.. ஆம் அப்போது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே; பாதுகாப்பு செயலாளராக கோத்தபாய ராஜபக்சே. ராஜபக்சே சகோதரர்களின் இனவெறியாட்டத்தை, ஈழத் தமிழரின் பேரழிவை, 30 ஆண்டுகால விடுதலை யுத்தம் அழிக்கப்பட்டதை கொண்டாடி குதூகலித்தது சிங்கள தேசம். சர்வதேச போர் நெறிமுறைகளை கிஞ்சித்தும் மதிக்காமல் நச்சு குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களை வேட்டையாடி ராஜபக்சே கும்பலுக்கு தமிழர்கள் விட்டுக் கொண்டிருந்த சாபம் இப்போது அவர்களது வாழ்நாளிலேயே பலித்து கொண்டிருக்கிறது..
ஆம் சிங்களர் ஆதரவு எங்களுக்கே இருக்கிறதே என ராஜபக்சே குடும்பம் கொக்கரித்தது. அதனாலேயே ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்களாக எத்தனையோ ராஜபக்சேக்கள் அரியாசனம் ஏறினர். ஆனால் அதிகார வெறியை மட்டுமே வாழ்வியலாக கொண்ட ராஜபக்சேக்களின் அரசு நிர்வாகம் சிங்களுக்கு கடைசியில் பசியையும் பட்டினியையும்தான் கோரப் பரிசாக கொடுத்தது. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த சிங்களர், ராஜபக்சேக்களே வீட்டுக்குப் போங்கள் என போர்க்கோலம் பூண்டனர்.
உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் ராஜபக்சேக்களுக்கு எதிராக அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர் சிங்களர். எங்கள் வலியை இப்போதாவது புரிந்து கொண்டீரே என முஸ்லிம்களும் தமிழரும் சிங்களருடன் இணைந்து கொள்ள கொழும்பு காலிமுகத் திடல் உலகை அதிரவைத்த இன்னொரு ஜல்லிக்கட்டு போர்க்களமானது.
ராஜபக்சே சகோதரர்கள் எத்தனையோ வியூகங்கள் வகுத்து நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க முயன்றனர்.ஆனால் காலம் ராஜபக்சேக்களுக்கு கை கொடுக்கவில்லை. இறுதியாக குண்டர்களை ஏவிவிட்டு போராட்டக்காரர்களை ஒடுக்கவும் கூட முனைந்தது ராஜபக்சே கும்பல். அதுவும் ராஜபக்சேக்களுக்கு உதவவில்லை. வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே எனும் பேரினவாதி- போர்க்குற்றவாளி இப்போது விரட்டியடிக்கப்பட்டுவிட்டார். மகிந்த ராஜபக்சேவின் கூட்டாளி அமைச்சரவை சகாக்களும் பதவிகளை விட்டு ஓடிவிட்டனர்.
ஆம் வரலாறு திரும்பி நிற்கிறது.. எந்த சிங்களர் ஆதரவு தந்து ஈழத் தமிழர்களை மகிந்த ராஜபக்சே அழித்தாரோ..அதே சிங்களர் கோபத்தால் இன்று பிரதமர் பதவியை பறிகொடுத்து நிற்கிறார் மகிந்த ராஜபக்சே. அதுவும் தமிழினப் படுகொலை அரங்கேறிய அதே மே மாதத்தில்- தமிழர் சாபம் பலித்தது காண்!












Click it and Unblock the Notifications