கடும் பஞ்சம்... இலங்கை அதிபர், நிதியமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
கொழும்பு: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவையும் சந்தித்து பேசினார். இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் நிதியுதவி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணிக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை. இதனால் உணவு பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. தட்டுப்பாடு காரணமாக விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்று இருக்கிறது. பலர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.
உணவு மட்டுமின்றி எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. பல மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. காகிதங்கள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் கூட ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தியாவின் உதவி இலங்கைக்கு தற்போது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பல ஆயிரம் கோடிகள் கொடுத்து உதவியிருக்கிறது இந்தியா.

மாலத்தீவு, இலங்கை பயணம்
சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலில் உள்ள இரண்டு முக்கிய அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக மாலத்தீவு, இலங்கை நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். மாலத்திவில் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித்துடன் இரு நாட்டு உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியா - மாலத்தீவு உறவு
செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இந்தியா-மாலத்தீவு உறவு என்பது இருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் இதுவரை இல்லாத அளவுக்கு மேம்படுத்தும் வகையில் உச்சம் தொட்டுள்ளது. பொதுவான சவால்களை எதிர்கொள்வது மட்டுமின்றி பிராந்திய நிலை தன்மைக்கான சக்தியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே உறவு திகழ்கிறது என்று கூறினார். மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார்.

இலங்கை பயணம்
மாலத்தீவு பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அங்கிருந்து அவர் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார். அவருக்கு இலங்கையின் எரிசக்தி, நெடுஞ்சாலைகள், சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை வழிநடத்தும் நான்கு இலங்கை அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கு இன்று முதல் 30ஆம்தேதி வரை தங்கி இருக்கும் ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கிறார்.

பிம்ஸ்டெக் மாநாடு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிதித்துறை அமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அதில் இந்தியாவின் ஆதரவான நிலைப்பாடு பற்றி விவாதிக்கப்பட்டது. எனவும் அண்டை நாடுகளுடன் இணக்கமான முறையில் இந்தியா செயல்பட்டு வருகிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியில் (பிம்ஸ்டெக்) பங்கேற்பார். மேலும், எதிர்க்கட்சிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுடனும் உரையாடுவார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தங்கள் கையெழுத்து
இலங்கை தலைநகர் கொழும்பில் நாளைய தினம் பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் ஜெய்சங்கர் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் இலங்கையில் பல்வேறு தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள நிதி உதவி கேட்டு கடந்த வாரம் அந்நாட்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்தியா- இலங்கை இடையே சமீபத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சூழ்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். அங்கு
இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் நிதியுதவி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோத்தபய ராஜபகசே உடன் சந்திப்பு
இதனிடையே கோத்தபய ராஜபக்சே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு மூன்று நாட்கள் பயணமாக வருகை தந்துள்ளார். இலங்கை அதிபரை சந்தித்து பேசினார் ஜெய்சங்கர். கொழும்பில் இன்று தொடங்கும் 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்டர் ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார்.

இந்தியா - இலங்கை உறவுகள்
டாக்டர் ஜெய்சங்கரின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதிபர், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியதற்கு இந்தியாவுக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்தார். இந்த ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் தபால் வெளியீடு உட்பட பல நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications