அந்தோ பரிதாபம்! எங்க அரசு கைவிட்டுடுச்சு! இலங்கையிலிருந்து கொத்தாக தமிழகம் வரும் அகதிகள்! அதிர்ச்சி
கொழும்பு: இலங்கையில் இருந்து நேற்று ஒரு குடும்பம் தமிழ்நாட்டிற்கு படகு மூலம் தப்பித்து வந்த நிலையில் தற்போது மேலும் சில குடும்பங்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளன. இதனால் இலங்கை அகதிகள் விவகாரம் மீண்டும் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
இலங்கையில் உள்நாட்டு போர் உச்சத்தில் இருந்த போது அங்கிருந்து தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழ்நாடு வந்தனர். அங்கு இன அழிப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு தப்பித்து வந்தனர். இவர்களுக்கான முகாம்கள் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது இலங்கையில் இருந்து பொருளாதார நிலை காரணமாக மக்கள் வெளியேறி வருகிறார்கள். இந்த முறை தமிழர்கள் என்று இல்லாமல் சிங்களர்களும் இலங்கையில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதார நிலை
இலங்கை பொருளாதார நிலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எங்கெங்கும் வறுமை.. பசி.. பட்டினி.. என்று மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை வருடமாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கொரோனாவிற்கு முன்பே அங்கு பொருளாதார நிலை சரிய தொடங்கிய நிலையில் கொரோனாவிற்கு பின்பாக அங்கு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

உக்ரைன் போர்
தற்போது உக்ரைன் போரால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ந்துள்ளது. முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 159.00 ரூபாயாக உள்ளது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 264.4 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல் வாங்க மக்கள் பல கிலோ மீட்டர்களுக்கு லைனில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் லைனில் நிற்கிறார்கள்
அதேபோல் கேஸ் சிலிண்டர் வாங்கவும் மக்கள் லைனில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களும் அங்கு உச்சம் தொட்டுள்ளது. மின்சாரம் இல்லை, உணவு இல்லை, எரிபொருள் இல்லை என்பதால் மக்கள் அங்கு கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசுக்கு எதிராக மக்கள் கடுமையாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்தே இலங்கையில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறும் கொடுமை அங்கு ஏற்பட்டுள்ளது.

அகதிகள்
நேற்று அதிகாலை 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டிற்குள் வர முயன்றது. அவர்களை கடலோர காவல் படையினர் பிடித்து கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஒரு கை குழந்தை, இரண்டு சிறுவர்கள், இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் தமிழ்நாடு வந்தனர். தமிழ்நாடு வந்த இவர்களுக்கு உணவு, பால், தண்ணீர் மற்றும் உடை வழங்கப்பட்டது.

மேலும் அகதிகள்
இதையடுத்து நேற்று இரவு மேலும் 10 இலங்கை அகதிகள் படகுடன் தனுஷ்கோடிக்கு வந்தனர். இவர்களுக்கும் உணவு, உடை, பால், போர்வை கொடுக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். க்யூ பிரிவு போலீசாரின் கட்டுப்பாட்டில் இவர்கள் உள்ளனர். க்யூ பிரிவு போலீசாரின் விசாரணையில் இவர்கள்.. எங்கள் நாட்டு அரசு எங்களை கைவிட்டுவிட்டது. அங்கு வேலை இல்லை. உணவு இல்லை.
கண்காணிப்பு
விலைவாசி உயர்ந்துவிட்டது. பசியில் கஷ்டப்படுகிறோம். அதனால் இங்கே பிழைப்பு தேடி வந்துள்ளோம், உதவுங்கள் என்று இலங்கையில் இருந்து தப்பித்து வந்த மக்கள் க்யூ பிரிவு போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நிலை நிலவுகிறது. இதனால் வரும் நாட்களில் இலங்கையில் இருந்து மேலும் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல் படையினர் எல்லையில் தீவிர கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications