இலங்கையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்பு.. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை! முழு தகவல்
கொழும்பு: இலங்கை நாட்டில் அரசியல் குழப்பம் உச்சத்தில் உள்ள நிலையில், புதிய இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
நமது அண்டை நாடான இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை
அதேபோல பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதி குறைந்துள்ளதால் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் கொந்தளிப்பில் உள்ள இலங்கை மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பெரிய குழப்பம்
இதனால் இலங்கையில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இத்தகவலை இலங்கை அதிபர் அலுவலகம் உடனடியாக மறுத்தது. இதையடுத்து சற்று நேரத்திலேயே அந்நாட்டின் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்சவை மகிந்த ராஜபக்ச சந்தித்தார்.

இடைக்கால அமைச்சரவை
மொத்தம் 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களின் ராஜினாமாவையும் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டார். மேலும், பொருளாதார நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அனைத்து கட்சிகளைக் கொண்ட அமைச்சரவையை அமைக்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்தார். இந்தச் சூழலில் புதிய இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
Recommended Video

புதிய அமைச்சர்கள்
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல வெளியுறவுத் துறை அமைச்சராக ஜி.எல், பெய்ரிஸ், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பெர்னாண்டோ பதவி ஏற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications